நம்பி உதவிகள் கேட்டோம்! ஜப்பான் எங்களை கைவிடவில்லை! அற்புதமான உணவுகளின் நகரம் ஒசாகா! -ஸ்டாலின்
ஒசாகா: அற்புதமான உணவுகள் கிடைக்கும் நகரம் ஜப்பானின் ஒசாகா நகரம் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்ந்திருப்பதோடு நம்பி உதவிகள் கேட்ட போது ஜப்பான் எங்களை கைவிடவில்லை எனவும் நன்றியுணர்வோடு பேசியிருக்கிறார்.
ஜப்பானில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இதை கூறியிருக்கிறார். மேலும், அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
பரந்து விரிந்த இந்திய நாட்டின், தமிழ்நாடு என்ற தனிப்பெரும் மாநிலத்தின் முதலமைச்சராக, ஜப்பானின் ஒசாகா நகரத்துக்கு நான் வருகை தந்துள்ளேன். மிக அழகான - கம்பீரமான - கட்டடக் கலை மிளிரும் நகரம், ஒசாகா! அற்புதமான உணவுகள் கிடைக்கும் நகரம். நட்பைப் பேணக்கூடிய மக்கள் வாழும் நகரம். எனக்கு ஜப்பான் புதிதல்ல. உங்களுக்கு நானும் புதியவனல்ல.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக முக்கியமான திட்டங்கள்.
அப்போது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம். ஜப்பான் நாடு எங்களைக் கைவிடவில்லை. 2010 காலகட்டத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 840 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி நிறுவனங்களை நடத்தி வந்தன.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 170 நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை நடத்தி வந்தன. அப்போது நடந்த ஒருவி விழாவில், ஜப்பான் அமைச்சர் மசாயூகி நாஷிமா, "சென்னை என்பது ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டார். அதே, ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து நான் வருகை தந்துள்ளேன்.
'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024' ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்வுக்கு, கூட்டாளர் நாடாக ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள். குறிப்பாக சொல்லப்போனால், ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை (Official Development Assistance - ODA) அதிகம் பெறும் நாடு இந்தியாதான்.
இரு நாடுகளுக்கு இடையேயான, பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப் பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் விளங்குகிறது.
தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.
நிசான்,
தோஷிபா,
யமஹா,
கோமேட்ஸு,
யோரோசு,
யமஹா
ஹிட்டாச்சி மற்றும்

யூனிப்ரெஸ் - போன்ற மிகப் பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித்திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இது நீண்டு கொண்டே போகும் பட்டியல்.
தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.உயர்ந்த மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த அடிப்படையோடு தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடும், வரவேற்கிறது என்று சொல்லி விடை பெறுகிறேன்.












Click it and Unblock the Notifications