மீண்டும் கொரோனாவுடன் போராடும் சீனா...வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் கெடுபிடி காட்டத் தொடங்கிய அரசு..!
பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உள்நாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு.
சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு வூகானிலிருந்து பரவிய கொரோனாவுக்கு எதிராக சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்போது பரவத் தொடங்கியுள்ள புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சமரசத்துக்கு இடமின்றி சீன அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் உலக நாடுகளிலிருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. சீனா மீதான உலக நாடுகளின் கணிக்க முடியாத தடைகளால், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே சீனாவில் இயல்பு நிலை திரும்பு குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது ஆகக்கூடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோய் துறை பேராசிரியர் சென் ஜெங்மிங் கணித்திருக்கிறார். சீனாவில் கொரோனா தடுப்பூசி விகிதம் அதிகம் என்றும் ஆனாலும் பெரும்பாலான தடுப்பூசிகள் செயல்திறன் குறைந்தது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சீனா மிகப்பெரிய நாடு என்பதால் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு அந்நாடு தனிமைப்படுத்தப்படாலும் அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கூடிய ஆற்றலை பெற்றிருப்பதாக சென் ஜெங்மிங் கூறியிருக்கிறார். இதேபோல் கோவிட் ஜீரோ என்ற நிலையை அடைய சீனாவுக்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதை கணிக்க இயலாது என்றும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகக் கூடும் எனவும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழத்தின் இயக்குநர் ஜேசன் வாங் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு வூகான் நகரிலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது போல், இப்போது சீனாவின் லான்சோ நகரிலிருந்து கொரோனா பரவத் தொடங்கியிருப்பது தெரியவருகிறது. இதன் காரணமாக படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த சீன மக்கள் மீண்டும் பதற்றத்துக்கும், கவலைக்கும் ஆளாகியுள்ளனர்.
இதனிடையே அடுத்தாண்டு 2022 பிப்ரவரி மாதம் சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் எத்தகைய தாக்கத்தை அந்த நிகழ்வில் ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications