ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம
பெய்ஜிங்: சீனாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு, போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, இன்சென்டிவ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

இதுதவிர வெளிநாடு, உள்நாடுகளுக்கு ஊழியர்களை அழைத்து செல்வது, சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு கார், பைக் பரிசாக வழங்குவது உள்ளிட்டவற்றை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
இந்நிலையில் தான் தற்போது சீனாவில் செயல்பட்டு வரும் நிறுவனம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சீனாவில் ஷெஜியாங் குவோஷெங் ஆட்டோமோடிவ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வாகன உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்தில் மொத்தம் 450க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனம் 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உற்பத்தி செய்தது. தற்போது சீனாவில் முக்கிய வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இது உள்ளது. இந்த நிறுவனம் தான் ஊழியர்களுக்கு சொகுசு வசதி கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி உள்ளது.
இந்த பிளாட்டுகளின் மதிப்பு என்பது ரூ.1.30 கோடி முதல் ரூ.1.50 கோடி மதிப்பில் உள்ளது. நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் திறமையான ஊழியர்களை பாராட்டும் வகையில் இந்த நிறுவனம் பிளாட்டுகளை வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 5 ஊழியர்களுக்கு இந்த நிறுவனம் பிளாட்டுகளை வழங்கி உள்ளது. இதில் ஒரு தம்பதியும் அடங்கும்.
அடுத்தக்கட்டமாக இன்னும் 13 பிளாட்டுகளை வாங்கி வைத்து ஊழியர்களுக்கு வழங்க உள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் வாங் ஜியாயுவான் கூறுகையில், ‛‛நிறுவனத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் மேனேஜ்மென்ட் பிரிவில் நீண்டகாலமாக பணியாற்றும் ஊழியர்களை தக்க வைக்க இந்த திட்டம் எங்களுக்கு உதவும்.
தற்போது 5 பிளாட்டுகளை வழங்கி உள்ளோம். அடுத்த ஆண்டு மேலும் 8 பிளாட்டுகளை வழங்க உள்ளோம். மூன்று ஆண்டுகளில் மொத்தம் 18 பிளாட்டுகளை ஊழியர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். நல்ல திறமை கொண்ட ஊழியர்களை தக்க வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. அதற்கு இந்த திட்டம் உதவும்'' என்றார்.
நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பிளாட்டுகள் நிறுவனத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ளது. இந்த பிளாட்டுகள் 1,076 சதுரஅடி முதல் 1,615 சதுர அடி என்ற அளவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1.30 கோடியில் இருந்து ரூ.1.50 கோடியாக உள்ளது.
இந்த பிளாட்டுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட அவர்கள் 5 ஆண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகே வீட்டுக்கான மொத்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனத்துக்கு தற்போது நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications