ஃபோனில் புதின் - டிரம்ப் பேசினார்களா? முற்றிலுமாக மறுத்த ரஷ்யா.. அப்போ உண்மை என்ன? பெரிய ட்விஸ்ட்
மாஸ்கோ: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் ரஷ்யா அதனை முற்றிலுமாக மறுத்து பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தனது பணியை தொடங்க உள்ளார். டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் விளாடிமிர் புதினும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த வாழ்த்து பெரும் கவனம் பெற்றது.
அதேபோல் ‛‛டொனால்ட் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளீர்களா?’’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின் ‛‛தயார்’’ என்று கூறினார். இதுபற்றி டொனால்ட் டிரம்பிடம் கேட்டதற்கு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பாசிட்டிவ்வாக கூறினார். இத்தகைய சூழலில் தான் இன்று காலையில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியானது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், உக்ரைனில் போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. அதன்பிறகு மற்ற செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகின. அதோடு டொனால்ட் டிரம்ப் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் போரை டொனால்ட் டிரம்ப் முடித்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப்பும் - விளாடிமிர் புதினும் பேசியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய நாட்டின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‛‛இருநாட்டு தலைவர்களும் பேசியதாக வெளியான தகவலில் முற்றிலும் உண்மையில்லை. அது முற்றிலுமாக புனையப்பட்ட கதை. இருவரும் தொலைபேசியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில நேரங்களில் புகழ்பெற்ற செய்தி நிறுவனங்களே இப்படி தவறான செய்திகளை வெளியிடுகின்றன’’ என்று கூறினார்.
இந்த வேளையில் புதினும், டொனால்ட் டிரம்பும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛தற்போது வரை அதுதொடர்பான உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை’’ என்றார். டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மீண்டும் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தி விடுவேன் என்று கூறினார். இதனால் டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் பேசியதாக வெளியான தகவல் உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications