இந்தியாவில் கொரோனா அதிகரித்ததால்.. உலகளாவிய தடுப்பூசி வினியோகத்தில் பெரும் பாதிப்பு- Covax கவலை
ஜெனிவா: இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவாக்ஸ் (COVAX) மூலமான தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதித்துள்ளது.
ஜூன் இறுதிக்குள் 190 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி டோஸ் பற்றாக்குறை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், Gavi, மற்றும் CEPI தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி என்பதுதான் Gavi அமைப்பாகும். ஏழை நாடுகளில் நோய்த்தடுப்பை உறுதி செய்ய செயல்படும் ஒரு பொது-தனியார் கூட்டமைப்புடன் கூடிய உலகளாவிய அமைப்பு இது.
தொற்றுநோய்களுக்கான ஆயத்த கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி அதாவது CEPI என்பது பொது, தனியார், மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து நன்கொடைகளை பெற்று, புதிய தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிக்கும் அமைப்பாகும்.
சிஇபிஐ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரிச்சர்ட் ஹாட்செட், Gavi தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சேத் பெர்க்லி, உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் மற்றும் யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
தடுப்பூசி திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றும் நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது, மருத்துவமனையில் நோயாளிகள் சேருவது குறைதல் மற்றும் இயல்புநிலையின் ஆரம்ப அறிகுறிகளை பார்க்க முடிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 2 பில்லியன் அளவு தடுப்பூசிகளை COVAX மூலம் உலக நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தெற்காசியாவில் கொரோனா அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. இது உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் COVAX செய்யும் தடுப்பூசி விநியோகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜூன் மாத இறுதிக்குள் 190 மில்லியன் டோஸின் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பல உற்பத்தியாளர்களுடன் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் COVAX இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெரிய அளவில் தடுப்பூசிகளை பெற உள்ளது. ஆனாலும், தற்போதைய, பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால், அதன் விளைவுகள் பேரழிவை தரக்கூடும் என்று எச்சரித்துள்ளது இந்த அறிக்கை.
COVAX என்றால் என்ன?
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக, உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் மற்றும் பிரான்ஸ் ஆகியோரால் தொடங்கப்பட்ட மூன்று முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றுதான் COVAX ஒன்றாகும். உலகளாவிய அரசுகள், சுகாதார நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விஞ்ஞானிகள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் நன்கொடையாளர்களை ஒன்றிணைத்தல் ஆகியவை உலக சுகாதார அமைப்பின் செயல்பாடாக உள்ளது. இதில், COVAX என்பது தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கும் தேவைக்கு ஏற்ப பங்கிட்டு தர ஏற்படுத்தப்பட்ட பிரிவு ஆகும். பணக்கார நாடுகள் மொத்த தடுப்பூசிகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் அளவுக்கு தடுப்பூசியை பெற COVAX ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பல தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications