ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உயிரிழப்பு 920ஆக உயர்வு.. 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கையைத் தாலிபான் அமைச்சர் பகிர்ந்துள்ளார்.
இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் முதலில் 130 முதல் 155 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இதனிடையே இப்போது 920 பேர் பலியாகி உள்ளதாகத் தாலிபான் தலைமையிலான ஆப்கன் அரசு அறிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டது.

உதவி
நிலநடுக்கத்தால் பாதிப்பு மிக மோசமாக உள்ள நிலையில், அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஆப்கனுக்கு உதவ வேண்டும் எனத் தாலிபான் செய்தித்தொடர்பாளர் கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் அருகவே உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

எங்கே
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் 51 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தலைநகர் காபூலில் உள்ள பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்திலும் கூட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுமார் 119 மில்லியன் மக்கள் நடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்டிகா மாகாணத்தில் தான் பெரும்பாலான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. தாலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்ற பின்னர், அந்நாடு எதிர்கொள்ளும் முதல் இயற்கை பேரிடர் இதுவாகும்.












Click it and Unblock the Notifications