அந்த மனசுதான் சார்.. ஃபுட்பால் மைதானத்தில் குவிந்த பொம்மைகள்! துருக்கி குழந்தைகளுக்கு ரசிகர்கள் ஆதரவு
துருக்கி குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கால்பந்து ரசிகர்கள் பொம்மைகளை பரிசளித்துள்ளனர்
அங்காரா: துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் பொம்மைகளை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். இதனால் மைதானம் முழுவதும் பொம்மைகளால் சூழ்ந்திருந்தது.
துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். தொடக்கத்தில் உயிரிழப்பு குறைவாக தெரிந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது வரை துருக்கியில் 45 ஆயிரம் மக்களும், சிரியாவில் 5 ஆயிரம் மக்களும் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் வீடற்றவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் 16 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. இன்னும் சில ஆயிரம் வீடுகள் வாழ்வதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. எனவே லட்சக்கணக்கான மக்கள் கொட்டும் பனியில் முகாம்களில் தங்கியுள்ளனர். வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகளை உருவாக்க ரூ.82 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

பாதிப்புகள்
நாட்டின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.86 ஆயிரம் கோடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை மீண்டும் பழையபடி மாற்ற வேண்டும் எனில் ரூ.9.2 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் கட்டிட இடிபாடுகளை அகற்ற உடனடியாக ரூ.900 கோடி தேவைப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. எனவே துருக்கி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது. பெண்களும், குழந்தைகளும் தங்கள் அன்றாட தேவைகளுக்கு நிவாரண பொருட்களையே நம்பியுள்ளனர். மட்டுமல்லாது மனதளவில் கடுமையான பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

உதவி
இந்நிலையில், உலக நாடுகள் பல தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறது. இந்நிலையில் துருக்கியின் Antalyaspor மற்றும் Besiktas அணிகளுக்கு இடையே துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் Besiktas அணி ரசிகர்கள் தங்கள் நாட்டின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பொம்மைகளை பரிசாக கொடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு ரசிகரும் தங்களால் முடிந்த அளவு பெரிய/சிறிய பொம்மைகளை வாங்கி மைதானத்தில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொம்மைகள்
டிராவில் முந்த இந்த ஆட்டத்தில், கால்பந்து வீரர்கள் பொம்மைகளை பெரிய பைகளில் சேகரித்தனர். இது குறித்து Besiktas அணி ரசிகர் ஒருவர் கூறுகையில், "எங்கள் நாட்டின் குழந்தைகளுக்கு நம்பிக்கை தேவைப்படுகிறது. பணம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதே அளவுக்கு அன்பும் தேவை. எனவே எங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நாங்கள் இந்த பொம்மைகளை பரிசுகளாக வழங்கியுள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

பொருளாதாரம்
இன்னும் ஒரு சில மாதங்களில் துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு புதியதாக வீடுகள் கட்டி தரப்படும் என்று அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். ஆனால் புதியதாக கட்டப்படும் வீடுகளாவது நிலநடுக்கத்தை தாங்கும் மாதிரி கட்டப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிலநடுக்கம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications