அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சவுதி அரேபியா? இஸ்ரேலுக்கு கொடுத்த பதிலடி.. காசாவால் முற்றிய மோதல்
ரியாத்: காசா விவகாரத்தில் இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையே மோதல் வலுத்துள்ளது. காசா மக்களுக்கு வேண்டுமென்றால் சவுதி அரேபியா தனது சொந்த நிலத்தில் தனி நாட்டை உருவாக்கி கொடுக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதற்கு சவுதி அரேபியா பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும் விமர்சனம் செய்துள்ளது. இதனால் 3 நாடுகள் இடையே புதிய மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - காசா இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காசாவின் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் மூலம் இந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் போர் தொடர்ந்து வருகிறது.

கடந்த 4ம் தேதி அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, டொனால்ட் டிரம்ப், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். அங்குள்ள கட்டட கழிவுகளை அகற்றி புதிதாக வீடு கட்டி கொடுக்கப்படும். இதனால் காசா மக்கள் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டாம்’’ என்று கூறினார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் சவுதி அரேபியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியா - இஸ்ரேல் இடையே பிரச்சனை உள்ளது. இப்போது காசா விவகாரம் இருநாடுகள் இடையே பிரச்சனையை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
காசாவை மீண்டும் கண்ட்ரோலில் எடுக்கும் ஹமாஸ்? உற்று பார்க்கும் இஸ்ரேல்! போர் நின்ற உடனே பரபரப்பு
இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே சுமூக உறவு என்பது இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வேண்டும் என்று சவுதி அரேபியா கூறியது. ஆனால் இஸ்ரேல் கேட்கவில்லை.
இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவும் என்பது இன்னும் மோசமானது. அதோடு பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேல் எப்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறதோ அப்போது தான் அந்த நாட்டுடன் தூதரகம் உள்பட பிற வழிகளில் உறவு என்பது வைக்கப்படும் என்று சவுதி அரேபியா கூறியது.
சமீபத்தில் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை, ‛‛பாலஸ்தீனத்தை தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அதன்பிறகு தான் இருநாடுகள் இடையேயான உ.றவு பற்றி சிந்திக்கலாம்’’ என்று கூறியது. இதற்கு தான் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‛‛சவுதி அரேபியா விரும்பினால் தனது சொந்த நாட்டுக்குள் பாலஸ்தீனியர்களை ஒரு அரசாக அமைத்து கொள்ள முடியும். பாலஸ்தீனியர்களுக்கு என்று தனியாக இடம் வழங்க போதுமான நிலம் சவுதி அரேபியாவிடம் உள்ளது. இஸ்ரேல் அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் நான் உடன்படவே மாட்டேன்’’ என்று கூறினார்.
இந்நிலையில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு சவுதி அரேபியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் ஷூரா கவுன்சிலின் உறுப்பினரான பின் டிராட் அல்-சதூன் தான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவை பொறுத்தவரை ஷூரா கவுன்சில் என்பது அதிகாரம் படைத்த அமைப்பாகும்.
இந்த கவுன்சில் தான் சவுதி மன்னருக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கொள்கை சார்ந்த முடிவுகள், பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை இந்த கவுன்சில் வழங்கும். இந்த கவுன்சிலில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் நேரடியாக சவுதி அரேபியா மன்னரால் நியமிக்கப்படுவார்கள். அப்படி ஷூரா கவுன்சிலின் உறுப்பினரான பின் டிராட் அல்-சதூனும், சவுதி அரேபியாவின் மன்னரால் நியமிக்கப்பட்டவர். இதனால் தான் அவரது கருத்து அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காசாவை விட்டு விரட்டப்படும் மக்கள்.. டிரம்ப் சொன்னபடி பிளானை கையில் எடுத்த இஸ்ரேல்.. அதிரடி உத்தரவு
இதுதொடர்பாக சவுதி அரேபியா செய்தி நிறுவனம் ஒகாஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் பின் டிராட் அல் சதான் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளதாவது: காசா பாலஸ்தீனத்துக்கு சொந்தமானது. அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இஸ்ரேலின் எழுச்சி மற்றும் அதன் தொடர்ச்சியான செயல்பாடு உள்ளிட்டவற்றை அறிந்த யாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இஸ்ரேல் தயாரித்து வழங்கிய தகவலை வெள்ளை மாளிகை அப்படியே பிரதிபலித்துள்ளது என்பது எங்களுக்கு தெரியும். ஜியோனிஸ்ட்டுகள் (இஸ்ரேல் தேசியவாதிகள்) மற்றும் அவர்களின் கூட்டாளிகள் ஊடக அழுத்தம் மற்றும் அரசியல் சூழ்ச்சி காரணமாக சவுதி தலைமையை சிக்கலில் சிக்க வைக்க முடியாது.
காசா விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த செயல் என்பது அவர்களின் வெளியுறவு கொள்கை மற்றும் இறையாண்மைக்கு ஏற்றது இல்லை. மாறாக இன்னொரு நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்து இனரீதியாக அவர்களை வெளியேற்றும் முயற்சியாக இது அமையும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுமானால் இஸ்ரேலியர்களை அலாஸ்கா , கிரீன்லாந்தில் குடியேற்ற வேண்டும்.’’ என்று கூறியுள்ளார். இதன்மூலம் காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்று கூறிய டொனால்ட் டிரம்ப் மற்றும் அதற்கு ஆதரவு அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதோடு காசா விவகாரத்தில் அமெரிக்காவுடனான உறவை சவுதி அரேபியா துண்டிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
***












Click it and Unblock the Notifications