மோடி சரியில்லை.. ராகுல் காந்தி தான் நல்லவர்.. ஷாகித் அப்ரிடி சொன்னதை கவனிச்சீங்களா
இஸ்லாமாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி நம் நாடு அமோக வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களிடம் கைக்குலுக்கவில்லை. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி இந்தியர்களை கொன்ற பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் இப்படி செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி கதறி வருகிறது. இந்நிலையில் தான் இந்து - முஸ்லிம் என்ற மத அடிப்படையில் மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ள ஷாகித் அப்ரிடி எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என ராகுல் நினைக்கிறார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. அதன்பிறகு கடந்த 14ம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கைக்குலுக்காத வீரர்கள்
பொதுவாக போட்டி முடிவடைந்தவுடன் இருநாட்டு வீரர்களும் கைக்குலுக்குவது வழக்கம். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்க மைதானத்தில் காத்திருந்த நிலையில் இந்திய வீரர்கள் தங்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றதோடு அந்த அறையின் கதவு மூடப்பட்டது. இது பாகிஸ்தான் கடுப்பாக்கி உள்ளது.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்ற நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வரையில் நம் அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இது கடந்த தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கதறும் பாகிஸ்தான்
மேலும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணி மற்றும் இந்தியா வீரர்களின் நடத்தையும் குறை கூறி வருகின்றனர். இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் நாட்டு டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்து, ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார்.
மோடி அரசு மீது அப்ரிடி தாக்கு
இதுதொடர்பாக ஷாகித் அப்ரிடி, ‛‛இந்தியாவில் உள்ள அரசு (மத்திய அரசு) இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசி அதிகாரத்தில் தொடர்கிறது. இது தவறான போக்கு. இந்தியா, இஸ்ரேல் போல் செயல்பட்டு வருகிறது.
காசா எப்படி இஸ்ரேல் நடத்துகிறதோ, அதேபோல் பாகிஸ்தானை இந்தியாவை நடத்தி வருகிறது. இப்போது கிரிக்கெட்டில் நடந்த சம்பவமும் மேலிட உத்தரவின்படியே நடந்துள்ளது'' என்று பிரதமர் மோடியை மறைமுகமாக சீண்டி உள்ளார்.
ராகுல் காந்தியை புகழ்ந்த அப்ரிடி
அதேபோல் ‛‛ராகுல் காந்தி மிகவும் நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ளார். அவர் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டவர். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார்'' என புகழ்ந்துள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடி வேண்டாம். இந்தியாவுக்கு ராகுல் காந்தி தான் சரியாக இருப்பார் என்று அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
வாய்க்கொழுப்பில் அப்ரிடி
இப்போது உத்தமன் போல் பேசும் இந்த ஷாகித் அப்ரிடிக்கு வாய்க்கொழுப்பு என்பது கொஞ்சமல்ல.. ரொம்பவே அதிகம். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக வாய்த்திறக்காத இந்த அப்ரிடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது கதறினார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தானை சிறைபிடித்ததை சுட்டிக்காட்டி கிண்டல் செய்தார்.
இதுதவிர அவ்வப்போது இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதன்படியே இப்போதும் மத்திய அரசு மத ரீதியாக செயல்படுவதாக கூறி பிரதமர் மோடியை மறைமுகமாக சீண்டி உள்ளார். அதோடு ராகுல் காந்தியை பாராட்டி உள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications