நொறுங்கிய இதயம்.. இளம்பெண்ணை கொன்று நிர்வாண ஊர்வலம் போன ஹமாஸ்.. உறுதி செய்த இஸ்ரேல்.. ஷாக்
இஸ்ரேல்: இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு உடலை நிர்வாணமாக எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்த பெண் யார்? என்பது குறித்து இதயத்தை நொறுங்க வைக்கும் உருக்கமான தகவலை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணைகளை ஹமாஸ் ஏவி தாக்குதல் நடத்தியது.

மேலும் இஸ்ரேலின் எல்லையில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் வாகனங்களில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் பராசூட் உதவியுடனும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
இதனால் கடந்த 7 ம் தேதி மட்டும் இஸ்ரேலில் 1,400 பேர் வரை பலியாகினர். அதோடு 230 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவுக்கு பிடித்து சென்றனர். இதையடுத்து தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக கூறி காசா மீது தாக்குதலை தொடங்கினார்.
இதன்மூலம் இருதரப்புக்கும் இடையே 25 நாட்களை கடந்து போர் நடந்து வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாக காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த 7 ம் தேதி நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகள் பெண் ஒருவரை கொன்று அவரது உடலை நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்து சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பெண் இஸ்ரேலில் இருந்து பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர் என்பது உறுதியானது. இருப்பினும் அவர் யார்? அவரது பெயர் என்ன? என்பது பற்றிய விபரம் அறிவதில் குழப்பம் இருந்து வந்தது.
இந்நிலையில் தான் தற்போது அந்த பெண் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இந்த கொடூரத்துக்கு ஆளான பெண்ணின் பெயர் சானி லாக் என்பதும், அவர் ஜெர்மனியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. டாட்டூ ஆர்ட்டிஸ்டான இவர் இஸ்ரேலில் கடந்த 7 ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது தான் அவரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதியாக பிடித்து சென்று கொலை செய்து உடலை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக எடுத்து சென்றதாக இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு சார்பில், ‛‛இசை நிகழ்ச்சியில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பெண் ஷானி லூக். இவர் கணக்கிட முடியாத அளவுக்கான துன்பத்தை அனுபவித்துள்ளார். அதுபற்றி அறிந்து எங்களின் இதயங்கள் உடைந்துவிட்டன'' என தெரிவித்துள்ளது.
முன்னதாக ஷானி லூக் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் இருக்கும் இடத்தை பற்றிய விபரத்தை தெரிந்தவர்கள் கூற வேண்டும் என அவரது தாயார் ரிகார்டா லூக் தெரிவித்து இருந்தார். அதோடு தனது மகள் இறக்கவில்லை. அவள் மீண்டும் பத்திரமாக திரும்பி வருவாள் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
அதேபோல் ஷானி லூக்கின் உறவினர் டோசினா வெயின்ட்ராப், ‛‛ஷானி லூக் கடத்தப்பட்டுள்ளார். இது எங்கள் குடும்பத்துக்கான ஒரு கெட்ட கனவு. அவள் மீண்டு வருவாள்'' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ஷானி லூக்கை கொன்று ஹமாஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்திருப்பதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இதனால் ஷானி லூக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications