ஒரே மணி நேரத்தில் 200 மிமீ மழையா?.. சீனாவில் அதிகாலையில் நடந்த சம்பவம்.. விடிந்து பார்த்தால்..!
பெய்ஜிங்: சீனாவில் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் அளவிற்கு அதிகமாக மழை பெய்து வருகிறது. பல்வேறு நகரங்கள் சீனாவில் இதனால் மூழ்கி உள்ளது.
உலகம் முழுக்க காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் காரணமாக மொத்தமாக பருவங்கள் மாறி, மழை, புயல், வெள்ளம் என்று இயற்கை பேரிடர்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் வெப்பநிலை காரணமாக உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. காலநிலை மாற்ற பிரச்சனை நினைத்ததை விட வேகமாக பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

சீனா
காலநிலை மாற்றத்தின் விளைவாக சீனாவிலும் தற்போது இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. தெற்கு சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஹெனான் என்ற மாகாணத்தில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது.

தீவிரம்
இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. பருவப்படி மழை பெய்வது இயல்புதான். ஆனால் இவ்வளவு மழை இதற்கு முன் பெய்தது இல்லை. இது எதிர்பார்க்காத வானிலை மாற்றம். வெப்பநிலை உயர்வு காரணமாக இதுபோன்ற அதீத மழை ஏற்படலாம். காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணமாக இருக்க முடியும் என்று சீனாவின் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கணிக்க முடியவில்லை
முக்கியமாக சீனாவின் செங்சாவ் பகுதியில் ஒரே மணி நேரத்தில் 200 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு 200 மிமீ மழை பெய்தது. அதன்பின் மொத்தமாக அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. சாதாரண மழை என்று நினைத்து தூங்க சென்ற மக்கள் எழுந்து பார்த்த போது மொத்த நகரமும் நீரில் மூழ்கி இருந்திருக்கிறது.

கார்
விடிந்து பார்த்தால் பல பகுதிகளில் முதல் மாடி வரை கூட வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. பல நூறு கார்கள் இந்த வெள்ளத்தில் மிதக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். இன்றும் தொடர்ந்து ஹெனான் பகுதியில் தீவிர கனமழை பெய்து வருகிறது.
|
வெளியேற்றம்
இந்த வெள்ளம் மற்றும் மழை காரணமாக 10 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 1000க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளது. சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக இந்த ஹெனான் மழை வெள்ளம் பார்க்கப்படுகிறது.

காலநிலை
காலநிலை மாற்றம் உலக நாடுகளை வேகமாக தாக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக இந்தியாவில் கூட திடீர் நிலநடுக்கம், மின்னல் தாக்குதல், தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்வது என்று கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. வானிலை ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தது போல காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications