இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்கள்.. யாழ். செம்மணியில் 40 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
கொழும்பு: இலங்கையின் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இலங்கையில் நடக்கும் அகழ்வாய்வில் அவ்வப்போது மனிதர்களின் எலும்பு கூடுகள் கண்பிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது யாழ்ப்பாணத்தில் செம்மணி எனும் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் புதியதாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
செம்மணியில் கடந்த 1996ம் ஆண்டு 'வெகுஜன புதைக்குழி' கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பெரிய குழி தோண்டி, மனிதர்களை கும்பலாக போட்டு புதைப்பதைதான் 'வெகுஜன புதைக்குழி' என்று சொல்லப்படுகிறது. செம்மணியில் இதுபோன்ற புதைகுழியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் ஜூலை.3ம் தேதி 2 குழந்தைகள் உட்பட 4 மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 1999ம் ஆண்டு ராணுவ வீரர் ஒருவர் இந்த வெகுஜன புதைக்குழி பற்றி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். செம்மணியில் 400 தமிழர்களை புதைத்ததாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மன்னார், கொக்குத்தொடுவாய் போன்ற பல இடங்களில், 1992 மற்றும் 2022 க்கு இடையில் ஏறத்தாழ 32 'வெகுஜன புதைக்குழிகள்' கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு போரின் போது காணாமல் போன தங்களது உறவினர்களின் எலும்புகளாக இது இருக்கலாம் என்று, பாதிக்கப்பட்ட தமிழர்கள் இந்த அகழ்வாய்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்து முறையான ஆய்வுகளோ விசாரணையோ நடத்தப்படவில்லை.
எனுவே, இந்த எலும்புக்கூடுகள் யாருடையது? என்பது இன்றுவரை தெரியாமலேயே இருக்கிறது. இந்த முறையாவது உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, மனித எச்சங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அந்த வகையில் நடத்தப்பட்டிருக்கும் புதிய அகழாய்வு கவனம் பெற்றிருக்கிறது.
மட்டுமல்லாது புதிய இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதை உரிய ஆய்வு செய்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கையில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு இதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
போரின் சமயத்தில் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று இலங்கையின் புதிய அதிபர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. எனவே 'வெகுஜன புதைக்குழி' விஷயத்திலும் இலங்கை அரசு நேர்மையாக நடந்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருப்பதாக பலரும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.











Click it and Unblock the Notifications