டிரம்ப் இருக்கட்டும்.. கத்தார் சிறையில் வாடும் டாப் இந்திய அதிகாரி.. 3 மாதங்களாக ஜெயில்! என்ன காரணம்
தோஹா: அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்தியாவின் டாப் ஐடி நிறுவனத்தின் தலைவர் 3 மாதங்களாகச் சிறையில் தவித்து வருகிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் டிரம்ப் வந்தது முதலே இந்தியர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. அங்குள்ள இந்தியர்கள் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு அழுத்தம் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. கிரீன் கார்டை சரண்டர் செய்யச் சொல்லி இந்தியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தான் இப்படி என்றால் இந்தியர்கள் அதிகம் செல்லும் மற்றொரு நாடான கத்தாரிலும் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியர் கைது
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் இந்திய ஊழியர் ஒருவர் அங்கு சுமார் 3 மாதங்களாகச் சிறையில் பரிதவித்து வருகிறார். இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா, பல சர்வதேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. அதன்படி கத்தாரில் உள்ள டெக் மஹிந்திராவின் தலைவராக இருப்பவர் அமித் குப்தா.
என்ன காரணம்?
வளைகுடா நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி இவரைக் கைது செய்தனர். டேட்டா திருட்டு தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாகவே அமித் குப்தா சிறையில் தான் இருந்து வருகிறார். கத்தார் சிறையில் இருந்து அவரை விடுவிக்க அவரது மனைவியும் பெற்றோரும் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அமித் குப்தாவின் குடும்பத்தினருடனும், கத்தார் அதிகாரிகளுடனும் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
3 மாதங்களாக சிறை
அமித் குப்தா கடந்த 2013 ஆம் ஆண்டு குஜராத்தின் வதோதராவிலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது முதலே அமித் குப்தா அங்கு தான் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி 1ஆம் தேதி திடீரென அவரது வீட்டிற்கு வந்த அதிகாரிகள் குப்தாவை கைது செய்துள்ளனர்.
தாய் கண்ணீர்
இது தொடர்பாக அமித் குப்தாவின் தாயார் புஷ்பா கூறுகையில், "கைது செய்யப்பட்ட போது முதல் 48 மணி நேரத்திற்கு அவருக்கு உணவைக் கூட தராமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு சிறைக்கு மாற்றியுள்ளனர். 3 மாதங்களாக அங்கேயே தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் யாரோ ஒருவர் தவறு செய்துள்ளாராம். அதனால் அந்நிறுவனத்தின் தலைவர் என்று எனது மகனைக் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டும் போன் மூலம் பேச அனுமதிப்பார்கள். அதுவும் 5 நிமிடம் மட்டும் பேச முடியும். அதைத் தாண்டி பேச முடியாது. சமீபத்தில் எனது மகனை நேரில் பார்க்க நாங்கள் தோஹா சென்றிருந்தோம். முதலில் அந்நாட்டுச் சிறைத் துறையினர் மகனைச் சந்திக்க அனுமதி மறுத்துவிட்டனர். இந்தியத் தூதரகம் தலையிட்ட பிறகு மகனைப் பார்க்க அனுமதித்தனர். அதுவும் 30 நிமிடங்களுக்கு மட்டும்!" என்றார்.
வெளியுறவு துறை சொல்வது என்ன
வெளியுறவுத் துறை அமைச்சகம் குப்தாவின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்களாம். இது தொடர்பாகத் தூதரக அதிகாரிகள் கூறுகையில், "கத்தாரில் அமித் குப்தா கைது செய்யப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவர் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் அமித் குப்தா குடும்பத்தினர், அவரது வழக்கறிஞர், கத்தார் அதிகாரிகளுடன் இந்த விவகாரத்தில் தொடர்பில் இருக்கிறோம். இந்த வழக்கில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் செய்யும்" என்றார்.
டெக் மஹிந்திரா விளக்கம்
அமித் குப்தாவின் கைது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக டெக் மஹிந்திரா நிறுவனமும் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக டெக் மஹிந்திரா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் குப்தாவின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்.. தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இப்போது எங்கள் ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை" என்றார்.












Click it and Unblock the Notifications