உக்ரைன் போரில் அப்பாவிகள் பலி... மரியுபோலில் மட்டும் 1500 பேர் உயிரிழப்பு... மொத்தமாக புதைக்கும் அவலம்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. மரியுபோல் நகர் பேரழிவை சந்தித்து வருகிறது. தற்போது வரை 1500க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் மொத்தமாக புதைக்கப்பட்டு வருவது நெஞ்சை உறைய வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தாலும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் ரஷ்யா வான்வழி தாக்குதலை தொடர்கிறது.
ஏவுகணை, குண்டுவீச்சில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதுமட்டுமின்றி இருநாட்டு வீரர்களும் பலியாவதோடு, உக்ரைன் நாட்டின் அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர். இதில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்த்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவரும் பலியானார்.
இந்த போரில் ரஷ்யாவுக்கு, உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. கீவ் நகரை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு முன்னேறும் ரஷ்ய வீரர்களை அவர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். மேலும் தாய் நாட்டை காக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளது உக்ரைன் ராணுவத்துக்கு கூடுதல் பலமாக உள்ளது.

1500 பேர் பலி
இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் மயுரிபோல் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு அப்பாவி மக்கள் இறந்து வருகின்றனர். இதுவரை 1500க்கும் அதிகமானவர்கள் அங்கு இறந்துள்ளனர். இவர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பூமியின் மோசமான மனிதாபிமானமற்ற பேரழிவை மரியுபோல் சந்திக்கிறது. 12 நாட்களில் 1,582 அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இவர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்படுகிறது. உக்ரைன் ராணுவத்தை தோற்கடிக்க முடியாத ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் குண்டுவீசி பொதுமக்களை கொல்கிறார். இதை தடுக்க எங்களுக்கு திட்டம் தேவையானாதாக உள்ளது'' என கூறியிருந்தார்.

முடிவுக்கு வர வேண்டும்
உடல்களை புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சமூகசேவகர் விலாடிமிர் பைகோவ்ஸ்கி கூறுகையில், ‛‛நான் விரும்பும் ஒரே விஷயம் என்னெவனில் போர் முடிவுக்கு வர வேண்டும். யார் குற்றம் செய்கிறார்கள், யார் சரியாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. போரை யார் துவக்கினார்கள் என்பதும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இது முடிவுக்கு வர வேண்டும்'' என கூறியுள்ளார்.

ரஷ்யா குற்றச்சாட்டு
இதற்கிடையே ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் உக்ரைன் நாட்டை குற்றம்சாட்டி இருந்தார். அவர் கூறுகையில், ‛‛துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனின் நிலைமை மோசமடைந்து வருகிறது. சில நகரங்களில் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டினர் குடியிருப்பு பகுதிகளில் கண்ணிவெடிகளை வைப்பதோடு, பாலம், சாலைகளை தகர்க்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து கிடைக்காமல் உள்ளது. குறிப்பாக மயுரிபோல் நகர் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது'' என குற்றம்சாட்டி இருந்தார்.

19 லட்சம் பேர் வெளியேற்றம்
இதற்கிடையே போருக்கு பயந்து உக்ரைனில் இருந்து 19 லட்சம் மக்கள் வெளியுள்ளனர். இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications