உச்சகட்ட கோபத்தில் இஸ்ரேல்.. கொத்துக் கொத்தாக செத்து விழும் மக்கள்! இத்தனை பேர் பலியா? ஷாக் தகவல்!
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல்களுக்கு பின்னர் இதுவரை ஈரானில் 787 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஈரானிய ரெட் கிரசண்ட் வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரான் முழுவதும் 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டு, மொத்தம் 1,000-க்கும் அதிகமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், ஈரானின் முக்கிய அணு வசதிகளில் ஒன்றான நடான்ஸ் எண்ணெய் உற்பத்தி ஆலை (Natanz Fuel Enrichment Plant) மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஈரான் இஸ்ரேல் போர்
இதையடுத்து பதற்றம் அதிகரித்தது. ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான International Atomic Energy Agency (IAEA) இன்று (மார்ச் 3) வெளியிட்ட தகவலில், நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் நுழைவு கட்டிடங்களில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்று உறுதிப்படுத்தியது. எனினும், அங்கு கதிரியக்க கசிவு அல்லது அணு பாதுகாப்பு தொடர்பான தீவிர பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், அணு நிலையம் தாக்கப்பட்டதாக வந்த தகவல் வளைகுடா நாடுகளில் கவலையை அதிகரித்துள்ளது.
நடான்ஸ் அணு நிலையம்
இந்நிலையில், இன்று மேலும் புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போரின் நான்காவது நாளாக இன்று (மார்ச் 3) ஈரான் ராணுவம், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்
அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ராணுவம் ஈரானின் அதிபர் அலுவலகம் மற்றும் தெஹ்ரானில் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு இரு தரப்பினரும் தாக்குதல்களை விரிவுபடுத்தியதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர்கள்
பாதுகாப்பு காரணங்களால் தூதரகங்கள் மற்றும் ராணுவத் தளங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையற்ற பயனங்களை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர தேவைகள் இருப்பின் தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போரால் சிக்கித் தவிக்கும் பயணிகளை திரும்ப அழைத்து வருவதற்காக இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா வளைகுடா பகுதிகளுக்கான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கு பதற்றம்
மஸ்கட், ஓமன், ஜெட்டா உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், துபாய் மற்றும் அபுதாபி விமான நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், பிராந்திய அமைதிக்காக தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் இளவரசர் சபா அல் கலித் அல் சபா ஆகியோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக தொலைபேசியில் உரையாடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதும், நடான்ஸ் அணு நிலையம் சேதமடைந்ததாக வந்த தகவலும், இருதரப்பும் தாக்குதல்களை விரிவுபடுத்தியிருப்பதும் மத்திய கிழக்கை மேலும் பதற்றமாக மாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications