ஆடை கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டு சிறை! ஈரானில் வருகிறது சட்டம்! போராட்டத்திற்கு தயாராகும் பெண்கள்
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக குரல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆடைக்கட்டுப்பாடுகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசாங்கம் தற்போது நிறைவேற்றியுள்ளது.
இஸ்லாமிய மதத்தின் சட்டங்களை கறாராக பின்பற்றும் நாடுகளில் ஈரானும் ஒன்று. எனவே இங்கு பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் உடை கட்டுப்பாடும். பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தை பெண்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க 'கலாச்சார காவலர்கள்' என்கிற தனி காவல் குழு இயங்கி வருகிறது.

இவர்கள் இஸ்லாமிய சட்டங்களை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்களை தண்டிக்கவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. இப்படிதான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா அமினி எனும் இளம் பெண்ணை ஹிஜாப் அணியவில்லை என்று கூறி இவர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அடுத்த நாள் அப்பெண் பிணமாக மீட்கப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை தொடுத்தனர். இப்படியாக இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. ஈரான் அரசு போராட்டக்காரர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியது தவறு என்று ஐநா மனித உரிமை ஆணையம் எச்சரித்திருந்தது. இப்படி இருக்கையில், இந்த சம்பவங்கள் நடந்து ஓராண்டு கடந்த நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா ஒன்று நிறைவேறியிருக்கிறது.
அதாவது, ஆடை கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழி வகுக்கிறது. மட்டுமல்லாது சிறை தண்டனையுடன் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழி வகுக்கிறது. 'ஹிஜாப் மற்றும் கற்பு மசோதா' என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு அந்நாட்டின் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
ஆடை கட்டுப்பாட்டை மீறுதல் அல்லது அநாகரீகமான முறையில் உடை அணிதல் போன்றவற்றிற்கு மட்டுமல்லாது, நிர்வாணத்தை ஊக்குவித்தல் அல்லது ஹிஜாபை கேலி செய்தல் போன்றவையும் குற்றம் என்று கருதி அதற்கும் சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழி வகுக்கிறது. ஆடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காத பெண்கள் வாகனங்களில் பயணம் செய்தால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது.
ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடிய மாஷா அமினி உயிரிழந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், ஆடை கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பது ஈரானில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் அதை எதிர்த்து பெண்கள் மீண்டும் போராட்டங்களை தொடங்குவார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications