ஈரான் மக்களை காப்பாத்துங்க.. டிரம்பிடம் கெஞ்சும் பட்டத்து இளவரசர்! அயதுல்லா கமேனிக்கு பெரிய சிக்கல்
டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஈரான் முழுவதும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் ஈரான் அரசு பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. இந்நிலையில் தான் டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஈரான் மக்களுக்காக அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி உதவி கேட்டுள்ளார். இது ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி முதல் அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கும், ஈரான் படைகளுக்கும் பல இடங்களில் சண்டை நடக்கிறது. இப்போது 62 பேர் பலியாகி உள்ளனர். 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இதனால் 1979ல் ஏற்பட்ட புரட்சி போல் ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூட ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதனை உணர்ந்த அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான்
ஈரான் பட்டத்து இளவரசரான ரெசா பஹ்லவி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் உதவி கேட்டுள்ளார். இந்த ரெசா பஹ்லவி தான் மக்கள் போராட்டத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவர் ஈரானின் அயதுல்லா கமேனிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இதனால் தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் ஈரானுடன் பகையோடு இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் உதவி கேட்டுள்ளார்.
இதுபற்றி ரெசா பஹ்லவி தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛ அதிபர் (டொனால்ட் டிரம்ப்) அவர்களே.. இது உங்கள் கவனத்திற்காகவும், ஆதரவிற்காகவும் குறிப்பிடுகிறேன். ஈரானில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்றிரவு லட்சக்கணக்கான துணிச்சலான ஈரானியர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இன்று இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
லேண்ட்லைன் சேவை இல்லை. தனது ஆட்சி முடிவு மக்களால் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற அச்சத்தில் உயர்மட்ட தலைவர் அலி கமேனி இதனை செய்கிறார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிப்பதாக நீங்கள் (டொனால்ட் டிரம்ப்) கூறினீர்கள். இந்த வாக்குறுதியின்படி மக்களுக்கு எதிரான மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்க்க வேண்டும். தகவல்தொடர்பு சேவைகளை முடக்கி கமேனி இளைஞர்கைள கொல்ல நினைக்கிறார்.
மக்கள் தங்களின் சுதந்திரத்துக்காக போராட வீதிகளில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளேன். மக்கள் அதனை செய்தனர். நீங்கள்(டொனால்ட் டிரம்ப்) உதவ வேண்டும் என்று நான் கேட்கிறேன். நீங்கள் அமைதியை விரும்பும் நபர். வாக்குறுதிக்கு கட்டுப்பட்டவர் என்பதை நிரூபித்து உள்ளீர்கள். இதனால் ஈரான் மக்களுக்கு உதவ வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதனால் ஈரான் மக்களுக்கு டொனால்ட் டிரம்ப் உதவுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக ஈரானில் மக்களின் போராட்டத்தை முடக்க கூடாது. இதனை செய்தால் அமெரிக்கா தலையீடும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்த கோரிக்கையை வைத்துள்ள ரெசா பஹ்லவி ஈரான் நாட்டை ஆட்சி செய்த கடைசி மன்னரின் மகன் ஆவார். கடந்த 1925 முதல் 1979ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஈரானில் ஆட்சி புரிந்த வம்சத்தின் பெயர் பஹ்லவி. கடந்த 1979ம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்த மன்னர் பெயர் முகமது ரெசா பஹ்லவி. இவர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டார்.
இதனால் இஸ்லாமிய அமைப்பினர் மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து முகமது ரெசா பஹ்லவியின் குடும்பத்தினர் அமெரிக்கா சென்றனர். அதன்பிறகு தான் ஈரானின் உயர்மட்ட தலைவராக அயதுல்லா ருஹோல்லா கொமேனி பொறுப்பேற்றார். இவரது மறைவுக்கு பிறகு அயதுல்லா அலி கமேனி அந்த பொறுப்பில் உள்ளார். ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா பஹ்லவியின் மகன் ரெசா பஹ்லவி தான் டிரம்பிடம் உதவி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications