அணு ஆயுதம் இல்லை.. ஆனாலும் தாக்குதல் ஏன்? ஈரான் மீதான அமெரிக்காவின் கடுப்புக்கு காரணம் இதுதான்
வாஷிங்டன்: ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில், ஈராக் மீது என்ன காரணம் சொல்லி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோ, அதே காரணத்தை சொல்லிதான் தற்போது டிரம்ப் தலைமையில் அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால் அந்த காரணத்தில் உண்மையே இல்லை. அப்படியெனில் அமெரிக்க தாக்குதலுக்கான நோக்கம் என்ன? இதை இந்த செய்தி விவரிக்கிறது.

வளைகுடா நாடுகள் மீதான அமெரிக்காவின் போர்
அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கம்.
1. டெமாக்ரட்ஸ் - ப்ளூ கலர் குதிரை சின்னக் கட்சி. (கிளிண்டன், ஒபாமா, ஜோபைடன்)
2. ரிபப்ளிகன்ஸ் - ரெட் கலர் யானை சின்ன கட்சி. (ரீகன், அப்பா புஷ், மகன் புஷ், டிரம்ப்)
இதில் யானை கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வளைகுடா நாடுகள் மீது போர் நடக்கும். காரணம் அங்கிருக்கும் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
1981-89ம் ஆண்டு அமெரிக்காவின் 40வது அதிபராக ரொனால்ட் ரீகனின் இருந்தார். இவர் யானை கட்சியை சேர்ந்தவர். இந்த 8 ஆண்டுகளும் அமெரிக்கா ஈராக்குக்கு ஆயுதங்களை சப்ளை செய்தது. இந்த ஆயுதங்களை வாங்கிக்கொண்டு, ஈரான் மீது போருக்கு சென்றது ஈராக். காரணம் ஈரானில் குடியரசு ஆட்சி மலர்ந்தது. சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் என எல்லா நாடுகளிலும் மன்னராட்சி நடந்த வந்த நிலையில், ஈரானில் மட்டும் குடியரசு ஆட்சி ஏற்பட்டதை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை.
80களில் கச்சா எண்ணெய்தான் தங்கம். மன்னராட்சி இருக்கும் நாடுகளில் எளிதாக டீல் பேசி எண்ணையை கொள்ளையடியக்க முடியும் ஆனால், குடியரசு நாடுகளில் அது வேலைக்கு ஆகாது. எனவே, அமெரிக்கா ஈராக்கை தூண்டியது. கிட்டதட்ட ஏழரை வருடம் இந்த போர் நீடித்தது. ஆனால், ஈரானில் ஆட்சி மாற்றத்தையோ, போரில் வெற்றியையோ பெற முடியவில்லை. கடைசியில் ரீகன் பதவிக்காலம் முடிந்த போது போரும் முடிந்தது.
அப்பா புஷ் (ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்)
ரீகனுக்கு பின்னர் அமெரிக்க அதிபராக அப்பா புஷ் தேர்வானார். 1989-93 வரை இவர் ஆட்சியில் இருந்தார். இந்த காலத்தில்தான் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் போர் வெடித்தது. இதற்கு காரணமும் எண்ணெய் வளம்தான். குவைத்திலிருந்து எண்ணெய் அதிக அளவில் அமெரிக்காவுக்கு போய்க்கொண்டிருந்தது. இதனை தடுத்து, குவைத்தை நாம் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சதாம் திட்டமிட்டு படையெடுக்க, உடனே, அமெரிக்கா ஈராக் மீது போர் துவங்கியது. போரில் தோற்ற சதாம், குவைத்தை அமெரிக்காவிடம் விட்டுவிட போர் முடிவுக்கு வந்தது.
அமெரிக்க டாலரின் சரிவும் சதாம் உசேனும்
அடுத்து அமெரிக்க அரசியலில் குதிரை கட்சி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் சிறிது இடைவெளிக்கு பிறகு, யானை கட்சி, 2001ல் ஆட்சிக்கு வந்தது. 43வது அதிபராக மகன் புஷ் பதவியேறார். 2009 வரை அவர் பதவியிலிருந்த போது அமெரிக்கா ஆட்டம் காண தொடங்கியது.
9/11 தாக்குதல் இந்த காலத்தில்தான் நடந்தது. இது உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியிருந்த நிலையில், 1999ல் பிறந்த யூரோ என்கிற புது நாணயம் டாலரை மிஞ்சி உலகில் பலமான கரன்சியாக உயர்ந்தது. எனவே, கச்சா எண்ணெயை யூரோவில் விற்று அதிக இலாபம் பெற, சதாம் ஹுஸைனும் அவரின் தலைமையிலான அரேபிய எண்ணெய் வள நாடுகளும் முடிவு செய்தன. இதனால் அமெரிக்க டாலர் அதள பாதாளத்தில் வீழ்ச்சி அடையும் என்பது திட்டவட்டம்.
WMD ஆயுதங்கள்
1982 இல் துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லிம்களை படுகொலை செய்ததில் சதாமுக்கு முக்கிய பங்கு இருந்தது. எனவே, இந்த குற்றத்தை வைத்து அவரது கதை முடிக்கப்பட்டது. சதாம் படுகொலைக்கு அமெரிக்கா சொன்ன நியாயம், "ஈராக்கில் சதாம் ஹுசைன் பெருமளவுக்கு WMD (Weapons of Mass Destruction) வைத்திருந்தார்" என்பதுதான்.
WMD என்றால் 'மக்களை கூட்டம் கூட்டமாய் அழிக்கும் ஆயுதங்கள்'. அப்படின்னா என்ன ஆயுதம்? அணு ஆயுதம் போலவா அதைவிட பயங்கரமா? என்று கேட்டால் பதில் இல்லை. அப்படியான ஆயுதங்களை இதுவரை அமெரிக்கா ஈராக்கிலிருந்து கண்டுபிடிக்கவில்லை.
ஈரான் மீது தாக்குதல்
தற்போது டிரம்ப் நடத்திய தாக்குதலுக்கு காரணமாக, இதே போன்ற கருத்துதான் முன்வைக்கப்படுகிறது. ஈரானில் அணு ஆயுதம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படியான ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் கூறியிருந்தார். கடந்த மார்ச் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் இதை கூறியிருந்தார். இருப்பினும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருந்தது.
ஆக, ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதுதான் அமெரிக்காவின் முதன்மை நோக்கம். குடியரசுக்கு பதிலாக மன்னராட்சியை தொடரவும், அதன் மூலம் எண்ணெய் வளங்களை மேலும் சுரண்டவும் அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக வளைகுடா அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications