ஈரானை தாக்க ரெடியான டிரம்ப்? திடீரென போர்க்கப்பல் - போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பதற்றம்
டெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பகை உள்ளது. இந்நிலையில் தான் ஈரானை நோக்கி அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் செல்லும் நிலையில் போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருகிறது. அதோடு, மத்திய கிழக்கில் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா பலப்படுத்தி உள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலுக்கு ரெடியாகி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானில் தற்போது வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தற்போது நடக்கும் போராட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் காரணம் என்று அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
இதனால் இஸ்ரேல், அமெரிக்கா உடன் ஏற்கனவே இருந்த ஈரானின் பகை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, ஈரானை தாக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் நடவடிக்கை தற்போது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை ஈரானை நோக்கி அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில், ‛‛ அமெரிக்காவின் மத்திய கமாண்ட் சென்டர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆபரேஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது F-15E ஈகிள் போர் விமானங்கள் மற்றும் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்டவற்றை ஈரான் அருகே கொண்டு சென்றுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் தனது வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் அமெரிக்கா பலப்படுத்தி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது அமெரிக்கா சார்பில் ஜோர்டான் நாட்டின் பிரிட்டனுக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் F-15E Strike Eagle jets என அழைக்கப்படும் 12 போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தி உள்ளது. இந்த விமானங்களை கொண்டு தான் கடந்த ஆண்டு ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது. தற்போது அந்த விமானங்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வானிலேயே எரிபொருள் நிரப்பக்கூடிய KC-135 aerial refuellers விமானம், மற்றும் C-130 கார்கோ விமானங்கள் உள்ளிட்டவையும் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் எஃப்-35சி மற்றும் எஃப்/ஏ-18 போர் விமானங்களை கொண்ட யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலும் அதன் பாதுகாப்பு குழுவுடன் ஜனவரி 20ம் தேதியில் தென் சீனக் கடலில் இருந்து மலாக்கா நீர் வழிப்பாதை வழியாக பயணத்தை தொடங்கியது.
இந்த கப்பல் இந்திய பெருங்கடலில் பயணித்தபோது ‛டிரான்ஸ்பாண்டர்' ஸ்வீட்ச்ஆப் செய்யப்பட்டது. இந்த கப்பல் ஈரானையொட்டி அரபிக்கடல் அல்லது பாரசீக வளைகுடாவுக்கு அருகே நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இஸ்ரேல், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கூடுதலாக வான் பாதுகாப்பு சாதனங்கள் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தாட் மற்றுமு் பேட்ரியாட் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த பெரிய அளவில் தயாராகி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.அதேபோல் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வெளியிட்ட செய்தியில், ‛‛அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கு முழுவதும் தனது படைகளை விரைவாக நிலைநிறுத்தி வருகிறது. இதனால் டிரம்ப் உறுதியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருக்கலாம்'' என்று கூறியுள்ளது. இதுவும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
முன்னதாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா தாக்கினால் டிரம்புக்கு பதிலடி கொடுப்போம் என்று கூறினார். மேலும் டொனால்ட் டிரம்புக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றி நியூஸ்நேஷன் செய்தி நிறுவனத்திடம் டிரம்ப் பேசினார். அப்போது அவர், ‛‛ஈரானில் இருந்து வருவதாக கூறப்படும் கொலை மிரட்டல்களுக்கு பெரிய அளவில் பதிலடி கொடுக்க்பபடும். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பான பைல்கள் மேஜையில் உள்ளன'' என்று கூறினார்.
மேலும் அமெரிக்கா, ஈரானை தாக்கினால் பதிலுக்கு அதன் கூட்டாளியான இஸ்ரேலை, ஈரான் குறிவைக்கலாம். இதனால் இஸ்ரேல் தனது வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் மற்றும் படை வீரர்களை உஷார்ப்படுத்தி உள்ளது. மொத்தத்தில் தற்ோபது மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications