இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவது பல பத்திரிக்கையாளர்களுக்கும் முன்கூட்டியே தெரியுமா?
அவிவ்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இதற்கு காரணமாக அமைந்த 'அக்டோபர் 7' தாக்குதல் குறித்து வெளிநாட்டு நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தார்கள் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. எவ்வளவுதான் உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டாலும் அவை மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் உயிர்பிழைத்திருப்பதே அங்குள்ள மக்களுக்கு சவாலானதாக இருக்கிறது. ஐநா சபையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இவை அனைத்துக்கும் தொடக்கம் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த சம்பவம்தான். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொடுமைகளை தாங்க முடியாத பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், 7ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 1400 பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பழிவாங்கதான் இஸ்ரேல் தற்போது இந்த கொடிய போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஹமாஸின் 7ம் தேதி தாக்குதல் குறித்து சில பத்திரிகையாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கிறது என இஸ்ரேல் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி இது குறித்து கூறுகையில்,
"நியூயார்க் டைம்ஸ் (NYT) , CNN, தி அசோசியேட்டட் பிரஸ் (AP) மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகிய 4 செய்தி நிறுவனங்களின் பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு அக்.7 தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. இவர்கள் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளில் ஒருவருடன் இவர்கள் தொடர்பில் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது" என்று கூறியுள்ளார்.
அதேபோல இஸ்ரேலிய அரசாங்கத்தின் பத்திரிகை அலுவலக இயக்குநர் நிட்சான் சென், ஹமாஸ் தாக்குதலின் புகைப்படங்களை வெளியிட்ட 4 புகைப்பட பத்திரிக்கையாளர்கள் குறித்து விளக்கம் கேட்டு இவர்கள் பணி செய்யும் ஊடக நிறுவனத்தின் தலைமையகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த புகைப்பட பத்திரிக்கையாளர்கள் ஹமாஸுடன் அக்.7 தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
ஒருவேளை இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் என்று இஸ்ரேலின் போர் அமைச்சரவையின் உறுப்பினரான பென்னி காண்ட்ஸ் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. போர் செய்திகளை படம் எடுத்ததற்காக தங்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, குற்றம் சாட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் படையினைர் இஸ்ரேலின் உள்ளே நுழைந்தது, இஸ்ரேலிய தடைகளை தகர்த்தது, பணய கைதிகளை கடத்தியது, மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட சம்பவங்களின் புகைப்படங்களைதான் இந்த பத்திரிகையாளர்கள் வெளியிட்டிருந்தனர். இது இஸ்ரேல் குறித்து நெகட்டிவ் பார்வையை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல்தான் மிகவும் பாதுகாப்பான நாடு என்கிற பிம்பத்தை கொண்டிருந்தது. இந்த பிம்பத்தை பத்திரிகையாளர்களின் படங்கள் உடைத்துவிட்டதால்தான் இஸ்ரேல் அரசு தற்போது இந்த பத்திரிகையாளர்கள் மீது கடுப்பில் இருப்பதாகவும், அதான் தொடர்ச்சியாகவே மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் தற்போது வரை 30க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications