பதற்றமான வங்கதேசம்.. KFC, PUMA உள்பட பல ஷோரூம்களில் பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்! பகீர் பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கேஎப்சி, பேட்டா, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ் உள்ளிட்ட பல சர்வேதச பிராண்டுகளை சேர்ந்த ஷோரூம்களை குறிவைத்து தாக்கி அதில் இருந்த பொருட்களை திருடி சென்றனர். இந்த திடீர் போராட்டம் என்பது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணியில் இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசா இடையே நடக்கும் போர் விவகாரமும், தவறான புரிதலும் தான் காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு இடைக்கால அரசு நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.

இவர் பொறுப்பேற்ற பிறகு வங்கதேசத்தில் அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. வங்கதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்துக்கள் உள்பட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் வங்கதேசம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தற்போது பரபரப்பான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் என்பது வெடிக்க தொடங்கி உள்ளது. இன்டர்நேஷனல் பிராண்டுகளாக உள்ள பேட்டா, கேஎப்சி, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ், உள்ளிட்ட ஷோரூம்களை குறிவைத்து மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த ஷோரூம்களின் கண்ணாடிகள் மீது செங்கல்லை வீசி தாக்கி உடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஷோரூமுக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளி கொண்டு எஸ்கேப் ஆகினர். இந்த போராட்டம் என்பது வங்கதேசத்தின் பல இடங்களில் நடந்துள்ளது.
அதன்படி சியால்ட், சதோகிராம், கல்னா, பரிஷால், குமில்லா மற்றும் தலைநகர் டாக்கா உள்பட பல இடங்களில் மக்கள் சர்வதேச பிராண்டுகளின் ஷோரூமை குறிவைத்து தாக்கி உள்ளனர். அதோடு டொனால்ட் டிரம்புக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். காசா மீதான போர் நடவடிக்கைக்கு டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு உதவி செய்து வருவதால் அவருக்கு எதிராக பொதுமக்கள் கோஷமிட்டனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி பரவி வருகின்றன. பொதுமக்களின் இந்த போராட்டம் மற்றும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தியபோது அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. 15 மாதம் நடந்த போர் கடந்த ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் போர் என்பது தொடங்கி நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் கோபமடைந்த வங்கதேச மக்கள் இந்த சர்வதேச பிராண்டுகளின் ஷோரூம்களை குறிவைத்து தாக்கி உள்ளனர். இதில் கொடுமை என்னவெனறால் இந்த சர்வதேச பிராண்டுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான் என்று யாரோ ஒருவர் கூற ஆக்ரோஷமடைந்தவர்கள் அந்த ஷோரூம்களை குறிவைத்து தாக்கி பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு சர்வதேச பிராண்டுகளான பேட்டா, கேஎப்சி, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி தங்களின் நிறுவனத்துக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளன.
பேட்டா நிறுவனம் சார்பில், ‛‛ பேட்டா என்பது இஸ்ரேல் சார்ந்த நிறுவனம் இல்லை. செக்குடியரசை சேர்ந்தது. எங்களுக்கும், இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1962ம் ஆண்டில் வங்கதேசத்தில் முதல் ஷோரூமை திறந்தோம். எங்களுக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு எங்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல்'' என்று கூறியுள்ளது. அதேபோல் பூமா என்பது ஜெர்மன் நாட்டு நிறுவனமாகும். கடந்த 2018 ம் ஆண்டில் இஸ்ரேல் கால்பந்து சங்கத்துக்கு நிதியுதவி செய்திருந்த நிலையில் தற்போது பூமா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் டொமினோஸ் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமாகும். இருப்பினும் அந்த நிறுவனம் இஸ்ரேலில் செயல்பட்டு வருகிறது. காசா போரில் டொமினோஸ் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில் ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளானது. இப்போது வங்கதேசத்தில் மீண்டும் அந்த ஷோரூம் மீது அட்டாக் நடந்துள்ளது. மேலும் கேஎப்சி என்பது அமெரிக்க நிறுவனமாகும். இதன் கிளை இஸ்ரேலிலும் உள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவை தலைமையிடமாக கொண்டு டிக்டுக் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை இது தொடங்கிய நிலையில் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இந்த பூமா, டோமினோஸ், கேஎப்சி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் சார்பில் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications