சிரியாவில் இறங்கி பெரிய சம்பவம் செய்த மொசாட் உளவாளி! 60 ஆண்டுகளுக்கு பிறகும் கைவிடாத இஸ்ரேல்!
டெல் அவிவ்: பொதுவாக வெளிநாட்டில் ஒரு உளவாளி சிக்கிக் கொண்டால் அவரை எந்தவொரு நாடாக இருந்தாலும் கைவிட்டுவிடும். ஆனால், இஸ்ரேல் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் உளவு சேகரிக்கச் சென்றவரின் குடும்பத்தினருக்கு இப்போதும் உதவியிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
உலகின் மிகவும் புகழ்பெற்ற உளவாளிகள் என்றால் நம்மில் பலருக்கும் எஃப்.பி.ஐ தான் நினைவுக்கு வரும். ஆனால், எஃப்.பி.ஐ அமைப்பையே தூக்கிச் சாப்பிடும் உளவு அமைப்பு இஸ்ரேலின் மொசாட். இஸ்ரேலுக்குத் தன்னை சுற்றிலும் எதிரி நாடுகள் இருப்பதால் வலுவான ஒரு உளவு அமைப்பைக் கொண்டிருப்பது அவசியமானது.

மொசாட்
இதனால் கடந்த 1949ல் தொடங்கப்பட்டது தான் மொசாட். இவர்களுக்கு அமெரிக்கா தான் உளவு பார்க்கும் பயிற்சிகளை அளித்தது. ஆனால், சீக்கிரமே அவர்களை மிஞ்சும் அளவுக்கு மொசாட் உளவாளிகள் செயல்படத் தொடங்கினர். தனது எதிரி நாடுகள் உட்படப் பல பகுதிகளில் சத்தமே இல்லாமல் மொசாட் உளவாளிகள் பல சம்பவங்களைச் செய்துள்ளனர். அவை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி நமக்கு ஆச்சரியம் தரும்.
இஸ்ரேலும் கூட தனது உளவாளிகளை எப்போதும் விட்டுத் தந்தே இல்லை. அப்படியொரு உளவாளியின் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகும் மறக்காமல் உதவியிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
எலி கோஹன்
சிரியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக உளவு ஆபரேஷன் செய்தவர் இஸ்ரேல் உளவாளி எலி கோஹன். சிரியாவில் கோஹனின் வெற்றி மொசாட் அமைப்பின் முதல் பெரிய சாதனைகளில் ஒன்றாகும். கோஹன் ரகசியமாகச் சேகரித்துக் கொடுத்த தகவல்கள் தான் 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் வெற்றிக்கு உதவியது.
உளவு ஆபரேஷன்
1960களில் சிரியாவுக்கு சென்ற கோஹனால் அங்கு அரசியல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்க முடிந்தது. அவர் ஒரு கட்டத்தில் சிரிய பாதுகாப்பு அமைச்சரின் உயர் ஆலோசகராகக் கூட உயர்ந்தார். இருப்பினும், 1965ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கு ரேடியோ மூலம் தகவல்களை அனுப்பும்போது கோஹன் பிடிபட்டார். அவரிடம் விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 1965ம் ஆண்டு மே மாதம் சிரியாவில் டமாஸ்கஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
அவரது உடல் இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை. தொடக்கக் காலத்தில் மத்திய கிழக்கு போரில் கோஹன் அனுப்பிய உளவுத் தகவல்கள் இஸ்ரேலுக்குப் பெரியளவில் கை கொடுத்தது. இதனால் இஸ்ரேலில் கோஹன் ஒரு ஹீரோவாகவே கருதப்படுகிறார். கடந்த 2019ல் கோஹன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் "தி ஸ்பை" என்ற தொடரும் வெளியாகி இருந்தது.

சிரிய ராணுவம் பறிமுதல்
தூக்கிலிடப்பட்ட கோஹனின் உடல் மட்டுமின்றி உடைமைகளும் கூட சிரியாவிலேயே இருந்தது. இஸ்ரேல் பொதுவாக எப்போதும் தனது உளவாளிகளைக் கைவிடாது. இதற்கிடையே 60 ஆண்டு முயற்சிக்குப் பிறகு கோஹனின் உடைமைகளை இப்போது இஸ்ரேல் மீட்டுள்ளது. 1965 ஜனவரி மாதம் கோஹன் சிரிய உளவுத்துறையால் பிடிக்கப்பட்ட பிறகு அவரது ஆவணங்கள், போட்டோக்கள், இஸ்ரேலில் உள்ள அவரது குடும்பத்தினருக்குக் கைப்பட எழுதிய கடிதங்கள் எனப் பலவற்றை சிரியா ராணுவம் பறிமுதல் செய்திருந்தது.
60 ஆண்டுகளுக்கு பிறகு
இப்போது சிரியாவிலும் ராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ள நிலையில். கோஹனுக்கு சொந்தமான சுமார் 2500 பொருட்களை சிரியா காப்பகத்தில் இருந்து இஸ்ரேல் மீட்டெடுத்துள்ளது. அதில் சில தனிப்பட்ட பொருட்களை கோஹனின் மனைவியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வழங்கினார். டமாஸ்கஸில் சதுக்கத்தில் கோஹன் தூக்கிலிடப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீவிர முயற்சியால் இப்போது கோஹனின் உடைமைகளை இஸ்ரேல் மீட்டுள்ளது.












Click it and Unblock the Notifications