திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல்! திணறிய இஸ்ரேல்.. இதுதான் சான்ஸ் என புகுந்து அடித்த ஈரான்!
டெல் அவிவ்: ஈரானின் ஏவுகணைகளை தடுப்பதில், இஸ்ரேலின் 'அயன்டோம்' முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் அயன்டோமின் செயல்பாடு 90 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது.

அயன்டோம் செயல்பாடு
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மோதல் ஒரு வாரமாக நீடித்து வருகிறது. இந்த 7 நாட்களில் சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்ததாகவும், இதில் 40 மட்டுமே இஸ்ரேலை தாக்கியுள்ளதாகவும், மீதமிருந்த 360 ஏவுகணைகளை அயன்டோம் போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தவிட்டதாகவும் 'நியூயார்க் டைம்ஸ்' கூறியிருந்தது. ஆனால், இதெல்லாம் நேற்றைய கதை.
வேலைக்கு ஆகாத அயன்டோம்
இன்று 'NBC' செய்தி ஊடகத்தில் வெளியான தகவல்கள்தான் ஹாட் டாப்பிக். அதாவது, நேற்று வரை 90% ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட நிலையில், இன்று 65% ஏவுகணைகள்தான் இடைமறிக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேலிய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக 'NBC' செய்தியை வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம் பலவீனமடைந்து வருகிறது என்று 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' மற்றும் 'நியூஸ் வீக்' செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
பீதியை கிளப்பிய தகவல்
இந்நிலையில் இஸ்ரேலிய உளவு அதிகாரியே கூறியதாக, 'NBC' செய்தி வெளியிட்டிருப்பது, அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பலவீனமானதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஈரானின் பலம்
ஒன்று, ஈரானின் மேம்பட்ட ஏவுகணைகள். ஈரான் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்து அதை கொண்டு தாக்கி வருகிறது. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துகிறது என்று 'நியூஸ் வீக்' கூறியிருந்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்த வகை ஏவுகணைகள் ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும். இதை இடைமறிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. இது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகையில்,
டைம் கொடுக்காத ஈரான்
"முன்பெல்லாம், ஈரான் ஏவுகணைகள் வருவது எங்களுக்கு 10-11 நிமிடங்களுக்கு முன்னர் தெரிந்துவிடும். எனவே அதை எப்படி தடுப்பது என்பதை நாங்கள் யோசித்து முடிவெடுப்போம். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் எங்களுக்கு வெறும் 6-7 நிமிடங்கள்தான் கொடுக்கிறது. எனவே சரியாக திட்டமிட முடியாமல் போய்விடுகிறது. அதேபோல ஒரு ஏவுகணையில் பல குண்டுகள் இருப்பதால், அதை தடுப்பதும் சாத்தியமில்லாததாக மாற்றிவிடுகிறது" என்று புலம்பியுள்ளனர்.
கொத்து குண்டு
அதேபோல ஈரான் சப்முனிஷன்களை (Submunitions) அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இது கொத்து குண்டுகளை போன்றதாகும். அதாவது ஒரு ஏவுகணையில் பல குண்டுகள் இருக்கும். இது வானத்திலிருந்து 7 கி.மீ உயரத்தில் சிதறி பல இடங்களை ஒரே நேரததில் தாக்கும். ஒரு ஏவுகணைக்குள் 20 சப்முனிஷன்கள் இருக்கும். இது ஒவ்வொன்றும் 2.5 கிலோகிராம் வெடி பொருளை சுமந்து வரும். 16 கிலோமீட்டர் பரப்பளவு பகுதியை இது மொத்தமாக நாசம் செய்யும்.
இஸ்ரேலின் பலவீனம்
இரண்டாவது காரணம், இஸ்ரேல் வான் பாதுகாப்பு அம்சத்தில், இடைமறிப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதுதான். அதாவது, ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளை, தாக்கி அழிக்க இஸ்ரேலும் ஏவுகணைகளை பயன்படுத்துகிறது. இந்த ஏவுகணைகளின் இருப்பு குறைந்திருப்பதும் இடைமறிப்பு குறைந்ததற்கு காரணமாகும்.
இதனால்தான் அயன்டோம், ஏரோ போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications