ஈரானுக்கு பதிலடி.. தெற்கு லெபனான் மீது பாய்ந்த ராக்கெட்டுகள்! ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்
ஷடெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கின் பதற்றத்தை அதிகரித்திருந்த நிலையில் தற்போது, லெபனான் மீது இஸ்ரேல் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் தேதி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சூழல் இப்படி இருக்கையில், திடீரென தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுக்க தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையும் சுமார் 150 ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் 2 கமாண்டர்கள் உட்ட மூன்று ஹில்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்டிருந்த அறிக்கையில்,
"ராட்வான் படைகளின் மேற்கு பிராந்தியத்தின் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி தெற்கு லெபனானில் உள்ள க்ஃபார் டூனினில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இஸ்ரேல் மீதான் ராக்கெட் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாார். இவருக்கு பக்க பலமாக இருந்த ஹிஸ்புல்லாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் மற்றொரு தலைவரான மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மூன்றாவதாக ஹிஸ்புல்லாவின் கடலோர பாதுகாப்புப்படை பிரிவின் தளபதி இஸ்மாயில் யூசுப் பாஸ் இந்த ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூவரின் மரணத்தையும் ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிசெய்திருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஹிஸ்புல்லா பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் தாக்குதல் பெரிய அளவில் இல்லையென்றாலும் கூட, இவர்களது தாக்குதல் இஸ்ரேலுக்கு தொடர்ந்து எரிச்சலை கிளப்பி வந்திருந்தது. அதே நேரம், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications