நொடிகளில் தரைமட்டம்.. எல்லா பக்கமும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்! மத்திய கிழக்கில் உச்சத்தில் பதற்றம்
பெய்ரூட்: மத்திய கிழக்கில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டை சுற்றியுள்ள பல பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நடத்தும் இந்தத் தொடர் தாக்குதல்களால் பாதுகாப்பே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கு ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா என இரு தரப்பை எதிர்த்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தாக்குதல்: அதிலும் கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இன்று லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கே உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இப்போது தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கை வந்து கொஞ்ச நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் கோட்டைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. இருப்பினும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் இடம்பெயர்வதும் அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகமான அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. எச்சரிக்கை வந்த சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளன. இதனால் பல மக்களுக்கு அங்கிருந்து வெளியேறப் போதியளவு நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடும் பாதிப்பு: இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலால் அங்குப் பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. அப்பகுதி முழுவதும் சாம்பல் புகை மூட்டம் எழுந்தது. கோபேரி என்ற பகுதியில் இஸ்ரேல் மிக மோசமான வன்முறை தாக்குதலை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் அமைந்துள்ள சௌயிஃபாத் எல்-அம்ரூசி மற்றும் கோபேரி என்ற பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தாங்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தவில்லை என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்திய பிறகே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்த இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே, அங்கு ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பு பல இருந்ததாகவும் அதைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி லெபனானின்தெற்கு நகரமான பின்ட் ஜபீல் என்ற நகரிலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் எல்லையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள இந்த நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் முழுமையாக இடிந்துவிட்டதாகவும் லெபனான் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எங்கும் பாதுகாப்பு இல்லை: அதேபோல பெய்ரூட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "அதிகாலை 4 மணியளவில் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்தோம். அப்போது எங்குப் பார்த்தாலும் புகை மண்டலமாக இருந்தது. இப்போது இஸ்ரேல் எல்லா பகுதிகளையும் தாக்குகிறது. பாதுகாப்பானது என்று எந்தவொரு இடமும் இல்லாமல் போய்விட்டது" என்று கண்ணீர்விட்டார்.












Click it and Unblock the Notifications