ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்!
ஈரான் - இஸ்ரேல் மத்தியில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால், அமைதி பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மத்திய கிழக்கு பகுதியில் தற்போது மீண்டும் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ளன. ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய முக்கிய நகரங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலையில் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல்கள் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்துள்ளன.
இந்த திடீர் போர் பதற்றம் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே மணி நேரத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தைக்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

ஈரான் கொடுத்த பதிலடி
மத்திய கிழக்கில் ஏற்பட்ட இந்த புதிய மோதலுக்கு லெபனான் விவகாரமே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி, போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீண்டும் மீண்டும் மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ராணுவம் நேற்று இரவு இஸ்ரேலின் வடக்கு பகுதியை நோக்கி ஏவுகணைகளை ஏவி அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் ஏவப்படும் வீடியோக்களை ஈரான் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன.
இருப்பினும், ஈரான் ஏவிய அனைத்தை ஏவுகணைகளையும் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4:43 மணி.. அதிரடி காட்டிய இஸ்ரேல்
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கக் காத்திருந்த இஸ்ரேல், இன்று அதிகாலை ஈரானின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கித் தனது அதிரடித் தாக்குதலை நடத்தியது. ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் மேற்கு டெஹ்ரான் பகுதியில் இன்று அதிகாலை 4:43 மற்றும் 4:45 மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.
அதேபோல் இஸ்பஹான் நகரில் மூன்று குண்டு வெடிப்புகளும், தப்ரிஸ் நகரிலும் பலத்த வெடிப்புகளும் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள டெஹ்ரான் நகர தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் வாழும் நகர்ப்புறப் பகுதிகள் இலக்கு வைக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதேபோல் ஈரான் நாட்டில் எவ்விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
எகிறிய கச்சா எண்ணெய் விலை:
இந்த திடீர் போர் பதற்றம் காரணமாக, உலகப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக விளங்கும் கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உடனடியாகக் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
தாக்குதல் பற்றிய செய்திகள் வெளியான ஒரே மணி நேரத்தில், சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை 3.63 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 96.75 டாலராக எகிறியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 3.35 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 93.89 டாலராக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications