சர்ரென பாய்ந்த பீரங்கி குண்டு.. வெடித்து சிதறிய கார்! காசாவில் விதியை மீறும் இஸ்ரேல்? ஷாக் வீடியோ
காசா: கடந்த சில நாட்களாக பாலஸ்தீனம் மீது வான்வழியாக இஸ்ரேல் விமானப்படை கடும் தாக்குதலை தொடுத்திருந்த நிலையில் தற்போது தரைவழி ஊடுருவலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் போர் விதியை மீறி, பொதுமக்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. இதில் 1400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல பாராகிளைடிங் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்த, ஹமாஸ் படையினர் 230 பேரை இஸ்ரேலிலிருந்து பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், கடுமையான பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. 24 நாட்களாக தொடரும் தாக்குதலில் சுமார் 8,005 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரபு நாடுகளும், பாலஸ்தீன ஆதரவு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. கத்தார் போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளுக்கும் மத்திஸ்தம் செய்து வருகிறது. இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தால், நாங்கள் பிடித்து வந்த கைதிகளையும் விடுவித்துவிடுகிறோம் என இந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்திற்கு முன் வந்திருக்கிறது ஹமாஸ். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸின் வாக்குறுதி உளவியல் பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மறுபுறம் "நம்மிடம் உள்ள கைதிகளை விடுவித்து எங்கள் சொந்தங்களை மீட்டு தாருங்கள்" என இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நிலைமை இப்படி இருக்கையில் போர் இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. "அதாவது, இத்தனை நாட்களாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த நமது படைகள் தற்போது தரைவழி தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ளன. இது போரின் இரண்டாவது கட்டம். ஹமாஸ் அரசு மற்றும் அதன் படைகளை முற்றிலுமாக அழித்து இஸ்ரேல் ராணுவம் நமது மக்களை மீட்டு வருவார்கள்" என நெதன்யாகு கூறியுள்ளார். இவர் கூறியதை போல காசாவுக்குள் பீரங்கிகளுடன் இஸ்ரேல் படைகள் நுழைந்து முன்னேறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் படைகள் பொதுமக்களை தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

குறிப்பாக கிழக்கு காசாவில் இஸ்ரேல் டேங்கர் ஒன்று பொது மக்களின் காரை சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. எஸ்ஆர்எம்ஜி எனப்படும் மத்திய கிழக்கு ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் இந்த வீடியோவை வெளியிட்டு இஸ்ரேலின் தாக்குதலை உறுதி செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இந்த வீடியோவை நான் சரிபார்த்திருக்கிறேன். இஸ்ரேலிய ராணுவத்தின் டேங்கர்கள் காசாவின் மிக முக்கியமான சாலையான சலா அல் டின்-வில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது வடக்கில் ஈரெஸ் கிராசிங்கில் இருந்து தெற்கில் ரஃபா கிராசிங் வரை 45 கி.மீ தூரம் நீண்டிருக்கிறது. ஈரெஸ் கிராசிங் என்பது ஹமாஸ் படைக்கு ராணுவ ரீதியாக பலவீனமான இடமாகும். இந்த தாக்குதல் மூலம் வடக்கு பகுதியை தெற்கிலிருந்த இஸ்ரேல் ராணுவம் பிரிக்க முயற்சிக்கிறது.
I verified this video. Israeli army and tanks are now in the very vital and important Salah Al Din road in the Gaza Strip. It’s the main highway and stretches 45km along the strip, starting from the Erez crossing in the North to the Rafah crossing in the South. This means that… pic.twitter.com/scE2uhKFWA
— Ahmed Maher (@amaherYAH) October 30, 2023
பாலஸ்தீனிய புகைப்பட பத்திரிகையாளர் யூசுப் அல் சைஃபி எடுத்த இந்த வீடியோவில், கார் ஓட்டுநர் இஸ்ரேலின் டேங்கரை பார்த்துவிட்டார். அவர் அங்கிருந்து தப்பிக்க காரை உடனே நிறுத்தி, பின்னாள் வந்து யு-டர்ன் செய்கிறார். ஆனால் அதற்குள் டேங்கரிலிருந்து வந்த குண்டு காரை தாக்குகிறது. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் அங்கிருந்து உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். தனக்கு எதிரே வரும் கார்களை பார்த்து அந்த பக்கம் போக வேண்டாம் என்று எச்சரிக்கிறார்" என்று கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஹமாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications