"கொடூரம்!" காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்த இஸ்ரேல்.. ஏவுகணை தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக மரணம்
டெல் அவிவ்: காசா பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த அக். மாதம் முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்திய நிலையில், அதன் பிறகு காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை இந்தப் போர் தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் அங்குப் பல மாதங்களாக மோதல் போக்கே நிலவி வருகிறது.
ரஃபா தாக்குதல்: கடந்த மாதம் ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.. இஸ்ரேலின் ஏவுகணைகளில் ஒன்று ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் முகாமை தாக்கியது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. உலக நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
பள்ளி மீது தாக்குதல்: இதற்கிடையே இப்போது மீண்டும் ஒரு பகீர் தாக்குதல் காசா பகுதியில் நடந்துள்ளது. அங்கு காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டனர்.. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் கூட உறுதி செய்துள்ளது. இருப்பினும், அந்த பள்ளி வளாகத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும் இதன் காரணமாகவே அங்குத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் சொல்வது என்ன: மத்திய காசாவில் நுசிராட் என்ற பகுதியில் உள்ள ஐநாவின் இந்த பள்ளியில் ஹமாஸ் பயங்கரவாதிகள், அதிலும் குறிப்பாக தங்கள் மீது கடந்த அக். மாதம் தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும் இதன் காரணமாகவே அங்குத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்: இருப்பினும், போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அந்த பள்ளியில் தான் தங்கி இருந்ததாகவும் அதன் மீதே இஸ்ரேல் இப்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காசாவில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றனர். ஹமாஸ் தரப்பும் இதை முழுமையாக நிராகரித்துள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு அதைச் சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருவதாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் அல்-தவாப்தா தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஹமாஸ் தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. இருப்பினும், அதை மறுத்த இஸ்ரேல் பேச்சுவார்த்தையின் போதும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியே வருகிறது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வந்தாலும் அதில் உடன்பாடு ஏற்படுவதற்கான சூழல் எதுவும் தென்படவில்லை.
போர் முடியுமா: காசாவில் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.. அங்குள்ள இஸ்ரேல் ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் இதற்கு மட்டுமே உடன்படுவோம் என்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் படிப்படியாக மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தை முன்மொழிந்து இருந்த நிலையில் அதை ஏற்க முடியாது என்பதே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கருத்தாக இருக்கிறது.
இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்த தயாராக இல்லாத சூழலில், இந்த போர் முடிவுக்குக் கொண்டு வராத சூழலே நிலவுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக காசாவில் உள்ள அப்பாவி மக்கள் தான்.












Click it and Unblock the Notifications