"உங்களில் யார் மிக மிக சோம்பேறி?" 26ஆவது நாளாக தொடரும் போட்டி! ரூல்ஸ் கேட்டா செம ஜாலியா இருக்கே
போட்கோரிகா: மாண்டெனெக்ரோ நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப் பெரிய சோம்பேறி யார் போட்டி இப்போது 25 நாட்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. போட்டியில் இன்னும் 7 பேர் களத்தில் உள்ளனர்.
ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு மாண்டெனெக்ரோ.. பால்கன் மலைக்கு அருகே அமைந்துள்ள மாண்டெனெக்ரோ நாடு சின்ன கிராமங்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டது. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே 6 லட்சம் தான்.

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஒரு போட்டி நடைபெறும் அதாவது, இந்த உலகிலேயே யார் சோம்பேறி என்ற பட்டத்திற்காக இந்த போட்டி நடக்கிறது. அதன்படி இந்தாண்டும் அங்கே இந்தப் போட்டுத் தொடங்கியுள்ளது.
சோம்பேறி: கடந்த மாதம் தொடங்கிய இந்தப் போட்டி 26 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்போர் 24 மணிநேரமும் பெட்களில் படுத்தபடியே இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து அமரவே அல்லது நடக்கவோ அனுமதி இல்லை. ஒருவர் எத்தனை நாட்கள் அப்படியே படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே போட்டியின் மையக்கரு. அதிக நேரம் படுத்துக் கொண்டே இருப்பவர் தான் போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவார்.
கேட்கவே வினோதமாக இருக்கும் இந்தப் போட்டி வடக்கு மாண்டெனெக்ரோவில் உள்ள பிரெஸ்னா என்ற ரிசார்ட் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். கடந்த மாதம் ஆரம்பித்த இந்த தொடர் இப்போது 25 நாட்களுக்கு மேல் தொடர்கிறது. ஆரம்பத்தில் இந்த போட்டியில் 21 பேர் கலந்து கொண்டனர். இருப்பினும், வரிசையாக ஒவ்வொரு நபராக இந்தப் போட்டியிலிருந்து விலகிய நிலையில், இப்போது ஏழு பேர் மட்டுமே இதில் எஞ்சியுள்ளனர்.
ரூல்ஸ் என்ன: இந்தப் போட்டியில் வெல்வோருக்கு $1,070 (சுமார் ₹ 88,000) பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் விதிகளின்படி, அவர்கள் எப்போதும் படுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் படுத்துத் தூங்க அனுமதி உண்டு. படுத்துக் கொண்டே உணவு மற்றும் கூல் டிரிங்ஸ்களை குடிக்கலாம். மேலும், மொபைல் போனை பயன்படுத்தவும் அனுமதி உண்டு.
அதேநேரம் இதில் போட்டியாளர்கள் எழுந்து அமர அனுமதி இல்லையாம். ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறைக்குச் செல்ல மட்டும் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு நடந்த இந்தப் போட்டியில் 117 மணி நேரம் அதாவது சுமார் 5 நாட்கள் படுத்தபடியே இருந்தவர் இந்தப் பட்டத்தை வென்றார். ஆனா்ல, இந்த முறை போட்டி 26 நாட்களை கடந்துள்ளது.
ஜாலியா இருக்கோம்: இது குறித்து 2021இல் வெற்றி பெற்றவரும் இந்தாண்டு களத்தில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவருமான டுப்ரவ்கா ஆக்ஸிக் கூறுகையில், "இந்தாண்டு போட்டி கடுமையாகவே இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். இதில் எங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எங்களைக் குழந்தை போலப் பார்த்துக் கொள்கிறார்கள். நாங்கள் சும்மா தூங்கினால் போதும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டி நடந்து வருகிறது. பொதுவாக மாண்டெனெக்ரோ நாட்டை சேர்ந்தவர்கள் சோம்பேறிகள் என்ற பெயர் உண்டு. அதை நக்கலடிக்கும் விதமாகவே இந்தப் போட்டியை அவர்கள் தொடங்கினார்கள். அதுவே இப்போது சீரியான போட்டியாக மாறிவிட்டது.












Click it and Unblock the Notifications