வெறும் நான்கு பேர்.. உள்ளே வந்த 4வது நிமிடம் ரூ.900 கோடி நகைகள் மாயம்! அதிர வைத்த கொள்ளை
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க 8 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் வெறும் 4 நிமிடங்களில் 102 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர்.
பிரான்சின் அரச குடும்பத்தினர் ஒரு காலத்தில் அணிந்திருந்த நீலக்கல், மரகதம் மற்றும் வைர நகைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது. பட்ட பகலில் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் நான்கு நிமிடங்களுக்குள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினர். இது உலகெங்கும் பேசுபொருளானது. இது பிரான்ஸ் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாயம்
ஒரு மரகத நெக்லஸ் மற்றும் மரகத காதணிகள், இரண்டு கிரீடங்கள், இரண்டு ப்ரோச்கள் (brooches), ஒரு நீலக்கல் நெக்லஸ் மற்றும் நீலக்கல் காதணி ஆகியவை திருடப்பட்டன. இவை அனைத்தும் 19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட விலையுயர்ந்த நகைகள் ஆகும். அரச குடும்பத்தினருக்கு இவை வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. பிரான்சின் செல்வம், அதிகாரம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தன. அவற்றின் முக்கியத்துவம் காரணமாகவே, 1887ல் அரச நகைகளில் பெரும்பாலானவற்றை அந்நாட்டு அரசு ஏலம் விட்டபோதும், இவை மட்டும் பாதுகாக்கப்பட்டன.
10 மில்லியன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொள்ளை நடந்தது. இதையடுத்து 3 நாட்கள் அருங்காட்சியகம் மூடப்பட்டு இருந்தது. புதன்கிழமை தான் லூவ்ரே அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், திருட்டு நடந்த அப்பல்லோ கேலரியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தத் திருட்டில் சுமார் $102 மில்லியன் (88 மில்லியன் யூரோக்கள்) மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக பாரீஸ் அரசு வழக்கறிஞர் லாரே பெக்கியாவ் தெரிவித்தார். குற்றவாளிகளைப் பிடிக்க 100+ போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அரச நகைகள் திருடப்பட்டதால், பிரான்ஸ் அரசு தர்மசங்கடமான சூழலில் தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்படி நடப்பது இது முதல்முறை இல்லை. அந்த அருங்காட்சியகத்தில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகப் பலரும் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். கடந்த 2024ல் இதே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மோனாலிசா ஓவியத்தின் மீது தான் சூப் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது..
கண்டுபிடிக்க முடியாது
திருடப்பட்ட அரச நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இருப்பினும், அவை கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமலேயே போகலாம் என வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "இந்த நகைகள் பழங்காலப் பிரெஞ்சு கலாச்சாரத்தின் அடையாளங்களாக இருந்தன. இந்த நகைகள் ரகசியமாக உடைக்கப்பட்டு, தனித்தனி பாகங்களாக விற்கப்படலாம். அவை பிரெஞ்சு அரச நகைகளின் ஒரு பகுதி தான் என அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறலாம். எனவே, இந்த நகைகள் மீட்கப்பட வாய்ப்புகள் குறைவு" என்றார்.
என்ன நடந்தது?
வெறும் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து கொள்ளையடித்துள்ளனர். காலை 9:34 மணிக்கு அந்த அருங்காட்சியகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், நான்கு நிமிடங்களில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, 9:38 மணிக்கு அறையைவிட்டு தப்பிச் சென்றனர். ஏணி பொருத்தப்பட்ட லாரி மூலம் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.
காணாமல் போன பொருட்களில் இரண்டு கிரீடங்களும். அவற்றில் ஒன்று, 1853இல் பேரரசர் நெப்போலியன் III தனது மனைவி பேரரசி யூஜெனிக்கு திருமணப் பரிசாக அளித்ததாகவும். அதில் 200 முத்துக்களும், கிட்டத்தட்ட 2,000 வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கிரீடம், நட்சத்திர வடிவிலான நீலக்கல் மற்றும் வைரங்களால் ஆனது. இது ஒரு நெக்லஸ் மற்றும் ஒரு காதணியுடன் சேர்ந்து பல அரச குடும்பத்தினரால் அணியப்பட்டுள்ளது.
நகைகள் மாயம்
1810ல் நெப்போலியன் போனபார்ட் தனது இரண்டாவது மனைவி ஆஸ்திரியாவின் மேரி-லூயிஸுக்கு திருமணப் பரிசாக அளித்த 100+ மரகதங்களும் 1,000+ வைரங்களும் கொண்ட நெக்லஸும் திருடப்பட்டது. அதற்குப் பொருத்தமான காதணிகளும் திருடப்பட்டன. இப்படி மொத்தம் 8 வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களைக் கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.
கொள்ளையர்கள் திருடிய ஒன்பதாவது பொருள் ஒரு கனமான கிரீடமாகும். அதைத் தூக்கி செல்வதில் சிரமம் இருந்ததால் அதை அப்படியே ரோட்டில் போட்டுவிட்டுச் சென்றனர். அதில் தங்கம், 1354 வைரங்கள் மற்றும் 56 மரகதங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருடப்பட்ட எட்டுப் பொருட்களும் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications