For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூயார்க்கில் மாரியம்மன் திருவிழா….15வது ஆண்டாக கொண்டாடும் கயானா தமிழர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க்(யு.எஸ்) சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்திலிருந்து கயானா சென்ற தமிழர்கள், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.

கயானாவிலிருந்து அமெரிக்க்காவுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களும், நியூயார்க் நகரில் கோவில் அமைத்து ஆண்டு தோறும் திருவிழா நடத்துகிறார்கள்.

சுமார் 5 ஆயிரம் கயானா தமிழர்கள் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்களாம். நியூயார்க் குயின்ஸ் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைத்து வழிபடுகிறார்கள்.

Maiamman Festival in New York

கோவிலில் மூலவராக மிகப்பெரிய மாரியம்மன் திருவுருச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உடன் பரிவார தெய்வங்களாக, மதுரை வீரன் சாமி, கருப்பண்ண சாமி, முனீஸ்வரன், கங்கை அம்மன் உருவச்சிலைகளும் உள்ளன.

உருவம் இல்லாமல் பச்சை சாத்தி, நாகூர் மீரானுக்கும் ஒரு சன்னதி அமைத்துள்ளார்கள். தங்கள் மூதாதையர் வழிபட்டு வந்த முறையிலேயே தாங்களும் வழிப்பட்டு வருவதாக அந்த தமிழர்கள் தெரிவித்தனர்.

180 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்து முஸ்லீம் வேறுபாடில்லாமல் மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.

பதினைந்தாவது ஆண்டாக, மாரியம்மன் திருவிழா, தமிழக கிராமப்புறங்களில் போலவே, நியூயார்க்கின் முக்கியப் பகுதியான குயின்ஸில் அமைந்துள்ள கோவிலில் நடைபெற்றது.

வாழை இலை, இளநீர், தென்னம்பாளை, வேப்பிலை, பிரம்பு, வெற்றிலை பாக்கு, மஞ்சத் தண்ணீர் என அத்தனையும் தமிழக கிராமப்புற வழிபாட்டு முறையில் இருந்தது.

Maiamman Festival in New York

கோவில் பூசாரியும், தமிழகத்தில் உள்ள வழக்கத்தைப் போல் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே வழி வழியாக தொடர்கிறார்கள்.

அம்மன் அருள் ஏற்றுவதற்கு உடுக்கை, தப்பு அடித்து, தமிழில் பாடி வரவழைக்கின்றனர். அருள் வந்த பூசாரி, கோவிலை வலம் வந்து ஆடி, குறி சொல்கிறார். வந்திருந்த பெருவாரியான மக்கள் தங்கள் குறைகளைக் கூறி அருள் பெற்றுச் செல்கின்றனர்.வேப்பிலை அடித்து பரிகாரம் சொல்லப்பட்டது.

அருள் வந்து ஆடிய சாமி தமிழிலேயே குறி சொன்னது. அருகில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார்.நெருப்புடன் சூடத்தை, எடுத்து எடுத்து வாயில் போட்டபடியே ஆடினார்.

மதுரைவீரனுக்கு சாராயப் படையலும்( கயானாவிலிருந்து தருவிக்கப்பட்ட ரம்) உண்டு. சேவல் பலியிடுதலும் நடைபெற்றது. ஒவ்வொரு வகை வழிபாட்டின் போதும் மஞ்சத் தண்ணீரை வாரி இறைக்கிறார்கள்.

Maiamman Festival in New York

கோவில் பூசாரியுடன் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் என ஒவ்வொரு சாமிக்கும் ஒருவர் அருள் வந்து ஆடினார்கள். அவர்களில் மிகவும் வயது குறந்த இளைஞரும் ஒருவர் ஆவார். சில பெண்களுக்கும் அருள் வந்து சாமி ஆடினார்கள்.

விழா முடிவுற்றதும் நம்ம ஊரில் ஊற்றுவதை போல் கூழ் ஊற்றினார்கள். மாலையில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படையலில் பல்வேறு விதமான இனிப்பு வகைகள், பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டன.

கோவில் உள்ளே நுழைந்ததும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்திற்குள் வந்தது போல்வவே இருந்தது. அங்கு பார்த்த அனைவரும் நம் பக்கத்து ஊர்க்காரர்கள் போலவே தெரிந்தார்கள்.

180 ஆண்டுகள் ஆனாலும் தலைமுறை தலைமுறையாக தமிழ் பெயர்களை இன்னும் சூட்டி வருகிரார்கள். கோவிலில் பார்த்த தமிழர்களின் பெயர்கள் வீராசாமி, வீரப்பன், பெருமாள் என கிராமத்துப் பெயர்களாகவே இருந்தது.

மதுரை வீரன் என்ற பெயரிலே இரண்டு பேரைக் காண முடிந்தது. இந்தத் தமிழர்களுக்கு தமிழில் சரளமாக பேசத் தெரியாது என்பதை நம்பவே முடியவில்லை..

கயானாவில் மாரியம்மன் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறதாம். அங்கு கிடா பலியிடுதல் உண்டாம்.

நியூயார்க் நகரில் தமிழக கிராமத்து மாரியம்மன் திருவிழா நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாகத் தான் உள்ளது. கோவில் பற்றிய மேலதிக விவரங்களை http://madrasi.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.

அதுவும் 180 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி எப்படி இருக்கிறார்கள் என்பதை இங்கு காண முடிந்தது.

- இர.தினகர்

படங்கள்: Stephanie L. Jackson, The Graduate Center, City University of New York (CUNY)

English summary
Guyana Tamils in New York celebrated 15th year of Mariamman festival in the temple, located in Queens NY.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X