ஒரு கை பார்க்கலாம்..97 வயதிலும் ஆழம் பார்க்கும் மகாதிர் முகமது..மலேசிய தேர்தலிலும் மீண்டும் போட்டி
கோலாலம்பூர்: மலேசிய நாட்டில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது. 97 வயதாகும் மகாதிர் முகமதுவின் இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை, ஏனென்றால் நாங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமர் வேட்பாளர் பொருத்தமானவர் என்றும் மகாதிர் முகமது கூறியுள்ளார்.
மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி(யுஎம்என்ஓ) தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு இஸ்மாயில் சப்ரி யாகூப் பிரதமராக பதவி ஏற்றார். கூட்டணி கட்சிகளுக்கு இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவியது.

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு
பேரரசர் சுல்தான் அப்துல்லா ஒப்புதலுடன் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் மீண்டும் போட்டி
நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அறிவித்துள்ளார். 97 வயதாகும் அவர், லங்காவி தீவு தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கூட்டணி கட்சியின் பிரதமர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை, ஏனென்றால் நாங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமர் வேட்பாளர் பொருத்தமானவர் என்றும் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

அதிக வயதான பிரதமர்
நாடாளுமன்ற தேர்தலில் மகாதிர் முகமது வெற்றி பெற்றாலும் அவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தேர்வு செய்யப்பட்டால் அதிக வயதான பிரதமராக இருப்பார். இதுவும் ஒரு சாதனைதான்.

அரசியல் குழப்பங்கள்
மலேசியாவில் கடந்த 2018 நடைபெற்ற பொதுத்தேர்தலில் 4 கட்சிகளை கொண்ட நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய பூர்வகுடிகள் கட்சியின் தலைவர் மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்றார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.

புதிய பிரதமர்
இதனையடுத்து மலேசிய ஐக்கிய கட்சியைச் சேர்ந்தவரும் மகாதிர் அமைச்சரவையில் உள் துறை அமைச்சராக பதவி வகித்தவருமான மொகிதின் யாசினை புதிய பிரதமராக 2020ஆம் ஆண்டு நியமித்தார் அந்நாட்டு மன்னர். இதையடுத்து, அரண்மனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மொகிதின் யாசின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். மகாதிர் கூட்டணி கட்சிகள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தன.

ஊழல் புகார்
மொகிதின் யாசின் கூட்டணியில் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு (யுஎம்என்ஓ) இடம்பெற்றிருந்தது. இது, நீண்ட காலம் ஆட்சியில் இருந்த, ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கட்சி ஆகும். நஜிப் ராசக் பிரதமராக இருந்தபோது, யாசின் துணைப் பிரதமராக பதவி வகித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2015-ம் ஆண்டு யாசின் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து தனிக் கட்சி தொடங்கிய அவர், மகாதிர் முகமது கூட்டணியில் இணைந்து அமைச்சாரானார். மீண்டும் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புடன் இணைந்து பிரதமரானார்.

கூட்டணி குழப்பம்
எனினும், ஆட்சி அமைத்த நாள் முதலே அவருக்கு முக்கிய கூட்டணிக் கட்சியான அம்னோவில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் எழுந்தன. பல குழப்பங்களுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மொஹிதின் யாசின். இதனையடுத்து அந்நாட்டின் 9வது பிரதமராக பதவியேற்றார் இஸ்மாயில் சப்ரி யாகூப். மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்படவே, தற்போது மன்னர் சுல்தான் அப்துல்லா ஒப்புதலுடன் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் அறிவித்தார்.இதையடுத்து மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புகள்
பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய நாட்டின் பிரதமர். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் கூட இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications