For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன் மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மலே சந்திப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, மேரிலாண்ட் மாகாண கவர்னர் மார்ட்டின் ஒ மலே சந்தித்தார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் மேரிலாண்ட் துணைச்செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

Maryland Governor Martin O'Malley meets PM Narendra Modi

அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்புள்ள கவர்னர்

மேரிலாண்ட் மாகாணத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வரும் கவர்னர் மார்ட்டின் ஓ மலே, அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர். அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வருகின்ற வேளையில், இந்திய பிரதமர் மோடியை, வாஷிங்டனில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய ஒரே அமெரிக்க கவர்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

வெளியுறவு விவகாரங்களில் அவரை முன்னிறுத்துக் கொள்ளும் வாய்ப்பாகவும் இது கருதப்படுகிறது. கவர்னரின் நம்பிக்கைக்குரிய டாக்டர் ராஜன் நடராஜன் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் டாக்டர் ஜெய்சங்கர் ஆகியோரின் முயற்சியால்
இந்த தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமானது.

மேரிலாண்ட் - இந்தியா வர்த்தக உறவு

பேச்சுவார்த்தையின் போது, தன்னுடைய இந்தியப் பயணத்தைப் பற்றி குறிப்பிட்ட கவர்னர், மேரிலாண்டிற்கும் இந்திய மாநிலங்களுக்குமிடையேயான உறவுகள், ஒப்பந்தங்கள், தொழில் முதலீடுகள் குறித்து விவரித்தார். மேரிலாண்ட் நகரங்களுடன் இந்திய நகரங்களுக்கான சகோதர உறவுகளையும் அதன் மூலம் நடைபெறும் திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து விவரித்தார். அக்டோபர் மாதம் இந்தோரிலும் , ஜனவரி மாதம் குஜராத்திலும் நடைபெறும் தொழில் வர்த்தக மாநாட்டிற்கு வருமாறு கவர்னருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தொழில்துறையில் பரஸ்பர முதலீடுகள் குறித்தும் விவாதித்தனர்.

மேரிலாண்ட் பயன்படுத்தும் இந்திய தொழில் நுட்பம்

வனத்துறை மற்றும் மீன்பிடித்துறைகளில் Geological Information System(GIS) தொழில் நுட்பத்தை இந்தியா பயன்படுத்துவது குறித்து கவர்னர், தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேரிலாண்டிலும் இந்தியாவின் இந்த தொழில் நுட்பத்தை தாங்கள் சில துறைகளில் பயன்படுத்துவதாகவும் கவர்னர் குறிப்பிட்டார். மேரிலாண்ட் பல்கலைக்கழகம் மற்றும் மேரிலாண்ட் சமூகக் கல்லூரிகளின் (Community College) இந்திய கல்வித்துறையுடன் கொண்ட உறவுகளை கவர்னர் விவரித்தார். பிரதமர் இந்தியாவும் அமெரிக்காவும் கல்வித்துறையில் செய்யப்போகும் ஒப்பந்தங்கள் பற்றி குறிப்பிட்டார். சைபர் செக்யூரிட்டி, பயோடெக்னாலஜி, லைஃப் சயன்ஸ், ஐடி மற்றும் விமானப்போக்குவரத்து துறைகளில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினர்.

அமெரிக்கப் பள்ளிகளில் யோகா அறிமுகம்?

தங்கள் நாட்டில் மருத்துவச்செலவுகள் மிக அதிகமாக உள்ளதாக வருத்தத்துடன் கவர்னர் குறிப்பிட்ட போது, அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை அறிமுகப்படுத்துங்கள், உங்களுடைய மருத்துவச்செலவுகள் கணிசமாக குறையும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவிலும் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்கள் அமல் படுத்தப்போவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஆசிய மக்கள் தொகையில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களே அதிகம் என்று இந்த தருணத்தில் நினைவு கூர்ந்தார். மூன்று இந்திய அமெரிக்கர்கள் மேர்லாண்ட் சபை உறுப்பினர்களாக(House Members) தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும் தெரிவித்தார். இந்திய அமெரிக்க நாடுகளில் உள்ள பொதுவான சமூகநெறிகள் (Common Values) குறித்தும் இருவரம் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டனர்.

சோதனையே சாதனைக்கு வழி

பிரதமராக தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கவர்னர் கேட்ட போது, சோதனைகளைக் கண்டு மிரளாமல் அதை புதிய வாய்ப்புகளாக பார்க்கிறேன். ஒவ்வொரு சவால்களையும் சரியாக கையாண்டால், அது புதிய சாதனைக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்த அதிபர் ஆவதற்கு வாய்ப்புள்ளவராக கருத்தப்படும் கவர்னர் மார்ட்டின் ஓ மலேவின் இந்திய பிரதமருடான சந்திப்பு, அமெரிக்காவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கவர்னருக்கு இந்திய அமெரிக்கர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைப்பதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பேச்சுவார்த்தையின் போது, மேரிலாண்ட் அரசின் சார்பில் துணைச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் மற்றும் இந்திய அரசின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் அலுவலக ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

English summary
Maryland Governor Martin O Malley has met Prime Minister Narendra Modi in Washington.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X