கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு
டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில் வெளியான தகவல்கள் "தவறாக வழிநடத்தும் பிரசாரம்" என்று கூறி கடுமையாக நிராகரித்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே ஆர்ப்பாட்டம் நடந்தது எனவும், இதில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் நிகழவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகினார். இந்தபோராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12 ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வங்கதேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் வன்முறை வெடித்தது. பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் முன்னாள் பிரதமர் முஜிபுர் ரகுமான், ஷேக் ஹசீனா வீடுகள், அவாமி லீக் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.
இந்து வாலிபர் அடித்து கொலை
தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த இங்குலாப் மாஞ்சா அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார். இதனால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்து வாலிபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இந்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து நபர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தூதரகத்தில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இந்த நிலையில் தான் இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
இந்து வாலிபர் கொலைக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தூதரகத்துக்குள் அத்துமீறி போராட்டக்காரர்கள் நுழைவு முயன்றதாக வங்கதேசம் ஊடகங்கள் பரப்பும் தகவலில் உண்மை இல்லை எனவும், பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது:- இது தவறாக வழிநடத்தும் பிரசாரம். சுமார் 20 முதல் 25 வாலிபர்கள் நேற்று வங்கதேச உயர் ஆணையர் அலுவலகம் முன்பு கூடினார்கள். வங்கதேசத்தில் மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
சிறுபான்மையினரின் பாதுகாப்பினை வலியுறுத்தி
மேலும் வங்கதேசத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வளாகத்தின் பாதுகாப்பை மீற எந்த ஒரு முயற்சியும் நடைபெறவில்லை. தடுப்புகளை உடைக்கவோ அல்லது எந்த ஒரு பாதுகாப்பு சிக்கலை உருவாக்கவோ எந்த ஒரு முயற்சியும் நடைபெறவில்லை.
ஆர்ப்பாட்டம் நடந்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததாகவும், இது தொடர்பாக வீடியோ காட்சிகள் கூட சமூக வலைத்தளங்களில் பொது வெளியில் இருக்கிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications