• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேபாள நாட்டுக்கு ரூ.6,250 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

By Veera Kumar
|

காத்மாண்டு: 2 நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாளத்துக்கு ரூ.6,250 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்து உள்ளார்.

நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறார். முதலில் பூடான் உடனான இரு தரப்பு உறவை வளர்க்கும் விதத்தில், ஜூன் மாதம் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு சென்று வந்தார்.

Modi announces $1 billion concessional line of credit to Nepal

இந்த நிலையில் நேற்று அவர் 2 நாள் பயணமாக மற்றொரு அண்டை நாடான நேபாளத்துக்கு சென்றார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரும் சென்றனர். இந்த பயணத்தின் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நேபாளம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை மோடி பெறுகிறார்.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவுக்கு தனி விமானத்தில் போய் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், மரபுமுறைகளை மீறி, அந்த நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா நேரில் வரவேற்றார். அப்போது துணைப்பிரதமர்கள் பாம் தேவ் கவுதம், பிரகாஷ் மான் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ஓய்வு எடுக்கச் சென்ற பிரதமர் மோடியை, வழியெங்கும் சாலையின் இருபுறமும் மக்கள் கூடி நின்று, கொடிகளை அசைத்து வரவேற்றனர்.

ஓட்டலில் பிரதமர் மோடியை நேபாள வெளியுறவுத்துறை மந்திரி மகேந்திர பாண்டே மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். நீர்மின்சாரம், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பிலுமான பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் காட்மாண்டில் உள்ள சிங்க தர்பார் செயலகத்தில் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

நேபாளத்தின் அமைதி நடவடிக்கைகள், அரசியல் சட்டம் உருவாக்கம், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவும் 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதில் முதல் ஒப்பந்தம், தைராய்டு வீக்கம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிற விதத்தில் அயோடின் கலந்த உப்பு வினியோகம் செய்வதற்கு இந்தியா ரூ.6.5 கோடி நிதி உதவி வழங்க வகை செய்கிறது.

இரண்டாவது ஒப்பந்தம், நேபாள-இந்திய எல்லையில் உள்ள மகாகாளி நதிநீரை பயன்படுத்தி நீர்மின்சாரம் தயாரிக்க வகை செய்யும் பஞ்சேஷ்வர் பன்னோக்கு திட்டத்தின் பிரிவுகள் 17, 18 ஆகியவற்றில் திருத்தம் செய்ய வகை செய்கிறது. மூன்றாவது ஒப்பந்தம், இந்தியாவின் தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி நிறுவனத்துக்கும், நேபாள நாட்டின் டெலிவிஷன் நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்பு வழங்குவதற்கு வகை செய்கிறது.

இந்த சந்திப்பு முடிந்ததும், நரேந்திர மோடி, நேபாள நாடாளுமன்றத்துக்கு சென்றார். அங்கே அவர் பேசும்போது, நேபாளத்துக்கு இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.6 ஆயிரத்து 250 கோடி சலுகை கடன் வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். "பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்த வசதியாக நேபாளத்துக்கு இந்தியா 10 ஆயிரம் கோடி நேபாள ரூபாய் சலுகைக்கடனை வழங்க முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே நேபாளத்துக்கு இந்தியா செய்து வருகிற முந்தைய உதவியிலிருந்து இது தனியானது" என கூறினார்.

நாங்கள் உங்களோடு நெருக்கமாக இருக்கிறோம். (இந்திய பிரதமர் ஒருவர்) இங்கு வருவதற்கு 17 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இனி இப்படி நேராது என்று வாக்குறுதி வழங்குகிறேன். நான் ‘சார்க்' மாநாட்டுக்கு மீண்டும் இங்கே வருவேன் என்றும் நரேந்திரமோடி தெரிவித்தார்.

நரேந்திர மோடி பேசினார் 40 நிமிடம் பேசினார். மோடி தனது பேச்சை நேபாள மொழியில் தொடங்கி, இந்தியில் தொடர்ந்தார். நேபாள மொழியில் அவர், "நான் ஒரு நண்பராக இந்த அழகிய தேசத்துக்கு வந்திருக்கிறேன். இங்கே ஒரு பிரதமராக வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறியபோது, அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

 
 
 
English summary
Prime Minister Narendra Modi on Saturday announced $1 billion (Nepalese rupees 10,000 crore) as concessional line of credit to Nepal and proposed a "HIT" formula for the development of the land-locked country endowed with rich hydropower potential.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X