இஸ்ரேல்.. 12 வருட நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது.. புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்
ஜெருசலம்: இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31ம் தேதி முதல், பெஞ்சமின் நெதன்யாகுதான் பிரதமராக இருந்து வந்தார். அங்கு கடந்த 2 ஆண்டுகளாக 4 முறை தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறியான நிலை நீடித்தது.
இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கை கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் அதாவது 62 இடங்கள் பெற்றுள்ளன.
இதையடுத்து, சுழற்சி முறையில் பிரதமர் பதவியை கூட்டணியினருக்கு தர ஒப்புதல் ஏற்பட்டது. முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் (49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நப்தாலி பென்னட் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 9 பெண் அமைச்சர்கள் உட்பட 27 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த கூட்டணியில் அரபு இஸ்லாமிக் கட்சி இடம் பிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் ஆக்ரோஷ போக்கை இது குறைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications