"எனக்கு சிங்கப்பூர் வாழ்க்கை பிடிக்கல.. சென்னைக்கே வந்துவிடுகிறேன்.." புலம்பும் NRI.. டிரெண்டிங்
சென்னை: சிங்கப்பூரில் கை நிறையச் சம்பாதிக்கும் இளைஞர் ஒருவருக்கு அங்கு வாழ்க்கை பிடிக்கவில்லையாம். இதனால் அவர் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டுள்ளார். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ளாராம். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் கை நிறையச் சம்பாதித்தாலும் கூட சொந்த நாட்டில் இல்லையே என்ற நினைப்பு இருந்தே கொண்டே தான் இருக்கும். இதற்கிடையே சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், தனது தாய்நாடான இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாக ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா வரும் சிங்கப்பூர் இளைஞர்
"சென்னைக்குத் திரும்புகிறேன்" என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒருவருக்குச் சொந்த ஊர், உறவினர்கள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை விளக்குவதாக அவரது போஸ்ட் இருந்தது. இது இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
அந்த இளைஞர் மேலும், "நான் 2007ல் சிறுவனாக இருந்தபோது சிங்கப்பூர் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது பள்ளி, கல்லூரிப் படிப்புகளைச் சிங்கப்பூரிலேயே முடித்தேன்.. மேலும் எனது வேலை மற்றும் எதிர்காலத்திற்குச் சிங்கப்பூரில் இருப்பதே சரியாக இருக்கும் என நினைத்து 2021ல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றேன்.
சலிப்பாக இருக்கிறது
ஆனால், எனக்கு இங்குத் திருப்தி கிடைக்கவில்லை என்பதே உண்மை. சிங்கப்பூரில் எனக்குச் சலிப்பான வாழ்க்கை தான் இருக்கிறது. அதை நான் வெறுக்கிறேன் என்பதை நான் ஓபனாக சொல்கிறேன். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு நான் சொல்வது புரியும். இந்தியாவில் பல குறைகள் இருந்தாலும், என் குடும்பத்துடன் நெருக்கமாக வாழவே நான் விரும்புகிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி" என்று அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் தான் யார் என்பதைப் புரியாத அளவுக்கு அடையாளச் சிக்கல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், "இந்தியாவுக்குத் திரும்ப வந்தால் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனாலும், நான் மன உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியா திரும்புவது என்று நான் முடிவெடுத்துவிட்டேன்.
சென்னையில் முதலீடு
நான் சிங்கப்பூர் வந்தபோது உடன் ஒப்பிடுகையில் இப்போது இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. சென்னை அல்லது காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கோடி ரூபாய்க்குள் பிஸ்னஸ் சொத்துக்களில் முதலீடு திட்டமிட்டுள்ளேன். இதில் 70 லட்சம் ரூபாய்க்குச் சொத்துகளை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், 30 லட்சம் ரூபாயை வணிகத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன்.
முடிந்தவரை கடன் வாங்காமல் அல்லது மிகக் குறைந்த கடனுடன் இதைச் செய்யப் பார்க்கிறேன்.. எந்த வகையான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைத் தவிர்க்கலாம்.. எதற்குத் தேவை அதிகமாக இருக்கிறது.. சொத்துகளை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் அறிவுரை தேவைப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால் அது மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் சொல்வது என்ன
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பெரும்பாலானோர் அவர் எடுத்தது மிகச் சிறப்பான முடிவு என்கிறார்கள். அவர்கள் மேலும், "நம்மிடம் இல்லாததை விரும்புவது தான் மனித இயல்பு. ஒரு விஷயத்தை நாம் தேடுகிறோம். அது கிடைத்ததும் இன்னொரு விஷயத்தைத் தேடுகிறோம். உங்கள் தேடலுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications