பாகிஸ்தான் நிலைமை ரொம்ப மோசம்.. 3ல் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு.. வெளியான திடுக் தகவல்..
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 3 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 10,000 பேருக்கு ஒரு மனநல மருத்துவர்கள் வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானில் மொத்த மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையே 90 ஆக மட்டுமே உள்ளது. அங்கு 5.50 லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் என்ற நிலை தான் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான்... பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு உலகம் முழுவதும் சப்ளை செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க அந்த நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்க கையேந்தி நிற்கிறது.

மேலும் பாகிஸ்தானில் இளைஞர்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்பு இல்லை. இதனால் அவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் டேட்டா ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது பாகிஸ்தானின் கராச்சி நகரில் 26வது சர்வதேச மனநல ஆரோக்கியம் சார்ந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மனநல டாக்டர்கள், ஆலோசகர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் மனநல அழுத்தம், மனநோயில் இருந்து விடுபடுவது எப்படி? என்று ஆலோசனைகளை வழங்கினர். மேலும் நிபுணர்கள் அதிர்ச்சியூட்டும் டேட்டாக்களை வெளியிட்டனர்.
அதில் பாகிஸ்தானில் வாழும் மக்கள் மனநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் ஒரு பக்கம் சரிந்து வருகிறது. அதேபோல் உற்பத்தி துறையும் பின்நோக்கி செல்கிறது. இதுதான் மக்களை மனஅழுத்தத்துக்கு தள்ளுகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 25.6 கோடி மக்கள் உள்ளனர். இதில் சுமார் 34 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது நாட்டில் வசிக்கும் மக்களில் 3ல் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு உள்ளது.
உலகளவில் பார்த்தால் 5ல் ஒருவருக்கு மனநோய் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் நிலைமை உலக சராசரியை விட மோசமாகி உள்ளது. இந்த மனநோயால் அவர்கள் மனசோர்வு, பதற்றம், அதிர்ச்சி மற்றும் தற்கொலை செய்யும் எண்ணங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள், சமூக அழுத்தங்கள், வேலையின்மை, பயங்கரவாத செயல், அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடர்கள், பிற நாடுகளுடனான மோதல் என பலவற்றை கூறலாம். இதுபோன்ற காரணங்களால் அங்குள்ளவர்கள் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 1,000க்கும் அதிகமானவர்கள் மனநோய் காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.
குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் வேலையின்மை உள்ளிட்டவற்றால் அதிகமாக மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் பாகிஸ்தான் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி கராச்சி மாநாட்டின் அறிவியல் குழு தலைவர் பேராசிரியர் முகமது இக்பால் அப்ரிடி கூறுகையில், ‛‛பாகிஸ்தான் மக்கள் மனசோர்வு, பதற்றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் போதைப்பொருள் விற்பனையும் இளைஞர்களை பாதிக்கிறது'' என்றார்.
இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானில் போதிய அளவு மனநல ஆலோசகர்கள் இல்லாததும், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு இல்லாதது தான் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது பாகிஸ்தான் மக்கள்தொகை 25.6 கோடியாக உள்ளது. உலகளாவிய சுகாதார தரம் என்பது 10 ஆயிரம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பாகிஸ்தானில் 5.50 லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் என்ற நிலை தான் உள்ளது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications