வறண்டு போகும் பசிபிக் பெருங்கடல்.. உருவாகும் புதிய 8வது கண்டம்! அதிசயத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
பெய்ஜிங்: உலகின் மிக பழமையான பெருங்கடலான பசிபிக் பெருங்கடல் வரும் காலத்தில் முழுமையாக வறண்டுவிடும் என்றும் இதனால் பூமியில் புதிதாக 8வது கண்டம் உருவாகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டம் எங்கே உருவாகும்.. இது எப்போது நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பூமி எப்படி உருவானது.. இது எப்படி இந்த நிலையை அடைந்தது.. வரும் காலத்தில் அது என்னவாகும் என்பது குறித்துக் கண்டறிய உலகெங்கும் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அப்படி நமது பூமி குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து சூப்பர் கம்ப்யூட்டிங் மாடலை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

புதிய கண்டம்
அதில் அடுத்த 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் பூமியில் ஒரு புதிய சூப்பர் கண்டம் உருவாகக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் படிப்படியாக வறண்டு சுருங்கி வரும் நிலையில், ஒரு கட்டத்தில் அதில் உள்ள நீர் முழுமையாக இல்லாமல் போகும். அப்போது பூமியின் டெக்டோனிக் தகடுகள் ஒன்றிணைந்து புதிய நிலபரப்பை உருவாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கிரகத்தின் புவியியலை மொத்தமாக மாற்றும் வகையில் ஒரு மிகப் பெரிய கண்டத்தையே உருவாக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சூப்பர் கண்டம்
இந்த ஆய்வு முடிவுகள் தேசிய அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. இது குறித்து கர்டின் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் சுவான் ஹுவாங் கூறுகையில், "பூமி குறித்து எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது மிக முக்கியமானது. அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில் பூமிக்கு என்ன நடக்கும் என்பது குறித்த ஒரு புரிதலை இது வழங்குகிறது.
கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில், பூமியின் கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சூப்பர் கண்டம் உருவாகிறது. இது சூப்பர் கண்ட சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் நடந்ததை வைத்துப் பார்த்தால் இப்போது இருக்கும் கண்டங்கள் அடுத்த 2 மில்லியன் ஆண்டுகளில் மீண்டும் ஒன்றிணையப் போகிறது" என்றார்.
எப்படி உருவாகும்
இந்த புதிய சூப்பர் கண்டம் அமெரிக்கா ஆசியாவுடன் மோதுவதால் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.. அதாவது அமெரிக்காவும் ஆசியாவும் மோதும்போது பசிபிக் பெருங்கடல் மூடப்படும் என்றும் இதனால் அமாசியா என்ற சூப்பர் கண்டம் உருவாகும் என்கிறார்கள். இந்த முக்கியமான நிகழ்வில் ஆஸ்திரேலியாவும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆஸ்திரேலியா முதலில் ஆசியாவுடன் மோதி, பின்னர் பசிபிக் பெருங்கடல் மூடப்படும் என்றும் அப்போது ஏற்படும் மாற்றத்தால் அமெரிக்காவும் ஆசியாவும் இணையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
டாக்டர் ஹுவாங் மேலும் கூறுகையில், "ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பூமியின் டெக்டோனிக் தகடுகள் எப்படி நகர்கிறது என்பதை உருவாக்கியுள்ளோம். 300 மில்லியன் ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் மூடவும் அமாசியா கண்டம் உருவாகவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது" என்றார். 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூப்பர் கண்டம் உடைந்தபோது பந்தலாசா சூப்பர் கடலின் எஞ்சிய பகுதியே பசிபிக் பெருங்கடலாக மாறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications