ஆபரேஷன் சிந்தூரின் போது தெய்வீக சக்தி உதவியது.. அடி வாங்கியும் அசராமல் பேசும் பாக். ராணுவ தளபதி
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை நிலை குலைய வைத்தது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு தெய்வீக சக்தி உதவியதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிர் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே மாதம் 8 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இதனால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், போரை நிறுத்துமாறு கெஞ்சியது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டை முடிவுக்கு வந்தது.
தெய்வீக உதவி கிடைத்தது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பலத்த அடி வாங்கிய பாகிஸ்தான், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அவ்வப்போது பல்வேறு கட்டுக்கதைகளை அடித்துவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிலையில்தான், பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிர், ஆபரேஷன் சிந்தூர் பற்றி மீண்டும் பேசியுள்ளார்.
ஆசிம் முனிர் இது தொடர்பாக கூறியதாவது:- "இந்தியாவுடனான ராணுவ மோதலின் போது பாகிஸ்தானுக்கு தெய்வீக உதவி கிடைத்தது" என்றார். மேலும், ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசுக்கும் எச்சரிக்கை விடுத்த ஆசிம் முனிர், எல்லையில் ஊடுருவும் பெரும்பாலான பயங்கரவாதக் குழுக்களில் பெரும்பாலானவை ஆப்கானியர்களை கொண்டு இருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications