இந்திய எல்லையில் ரகசிய விசிட்.. பாகிஸ்தான் உளவு + ராணுவ அதிகாரிகளை அழைத்து வந்த வங்கதேசம்! ஸ்கெட்சா?
டாக்கா: நம் நாட்டுடன் மோதி வரும் சூழலில் வங்கதேசம் பாகிஸ்தானின் உளவு பிரிவு மற்றும் ராணுவ அதிகாரிகளை ரகசியமாக எல்லைக்கு அருகே அழைத்து வந்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்ட நிலையில் திரும்பி சென்ற நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் இப்போது மக்களாட்சி நடக்கவில்லை. ேஷக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு தான் உள்ளது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். இடைக்கால அரசு அமைந்தது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

முகமது யூனுஷ் மற்றும் அவரது இடைக்கால அரசில் இருப்பவர்கள் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். அங்கு சிறுபான்மையினராக உள்ளவர்கள் மீதான தாக்குதலை தடுக்க தவறிஉள்ளனர். அதோடு எல்லையில் தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான எல்லையில் வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டு வீரர்களுடன் மோதுகின்றனர். அதேபோல் பாகிஸ்தான், துருக்கி, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளன. இந்த 3 நாடுகளும் நமக்கு எதிராக உள்ள நிலையில் அவற்றுடன் நட்பு பாராட்ட நினைக்கிறது இந்த வங்கதேசத்தின் இடைக்கால அரசு. அதோடு பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக தான் வங்கதேசம் பிரிந்தது. வங்கதேசம் உருவாக நம் நாட்டு ராணுவ வீரர்கள் தான் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டனர். நம் நாட்டு வீரர்கள் இல்லையென்று இன்று வங்கதேசம் என்ற நாடே இருக்காது. கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் வங்கதேசம் பாகிஸ்தானின் ஒருபகுதியாக தான் இருந்து இருக்கும்.
ஆனால் வங்கதேசத்தின் இடைக்கால அரசு அதனை மறந்து நம்முடன் மோத தொடங்கி உள்ளது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வங்கதேசம் சென்று அந்த நாட்டு ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வங்கதேசம் உருவாகி 54 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்போது முதல் முறையாக பாகிஸ்தான் - வங்கதேசம் உறவு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா - வங்கதேசம் இடையே மோதல் உள்ள நிலையில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு மற்றும் ராணுவ அதிகாரிகள் நம் நாட்டு எல்லைக்கு வந்து ஆய்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சிலிகுரி காரிடார் வழியாக மேற்கு வங்கத்துடன் இணைக்கும் பகுதி கோழிக்கழுத்து (Chicken Neck) பகுதி என்று கூறுகிறோம். அதாவது நம் நாட்டின் மேப்பில் இந்த இடத்தை பார்த்தால் கோழிக்கழுத்து இருப்பது போல் தெரியும். அதனால் தான் இதனை கோழிக்கழுத்து பகுதி என்கிறோம்.
இந்த கோழிக்கழுத்து பகுதி என்பது இந்தியா- வங்கதேசத்தின் எல்லையாகவும் இருக்கிறது. இந்த எல்லையின் அருகே வங்கதேசத்தின் ரங்பூர் மாவட்டம் உள்ளது. இந்த ரங்பூருக்குதான் பாகிஸ்தானின் உளவு பிரிவு மற்றும் ராணுவ அதிகாரிகள் என்று மொத்தம் 4 பேர் கடந்த 21ம் தேதி ரகசியமாக வந்து ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். இந்த குழுவில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசீம் மாலிக், மேஜர் ஜெனரல் ஷாகித் அமீர் அப்சர், மேஜனல்ஆலம் அமீர் அவான், முகமது உஸ்மான் ஜாதிப் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் வங்கதேசத்தின் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வந்து சென்று உள்ளனர்.
அதோடு பாகிஸ்தான் அதிகாரிகள் ஆய்வு செய்த இடம் என்பது நம் நாட்டின் கோழிக்கழுத்து பகுதியில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய பிறகு அந்த நாட்டு ராணுவ வீரர்கள், அதிகாரிகள் யாரும் இதுவரை வங்கதேசத்துக்கு செல்லாமல் இருந்தனர். ஆனால் இப்போது முதல் முறையாக பாகிஸ்தானின் உளவு பிரிவு மற்றும் ராணுவ அதிகாரிகளின் 4 பேர் கொண்ட குழுவினர் வங்கதேசம் சென்றுள்ளதோடு, நம் நாட்டின் எல்லை அருகே ரகசியமாக ஆய்வு செய்துள்ளனர்.
கடந்த வாரம் வங்கதேச பாதுகாப்பு படை அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர். வங்கதேசத்தின் ஆயுதப்படை பிரிவின் முதன்மை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்எம் கமரூல் ஹசன் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று அந்த நாட்டு முப்படை தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகள் இடையேயான ராணுவ உறவை பலப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதோடு வங்கதேசத்துக்கு வந்து செல்லும்படி பாதுகாப்பு துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று தான் பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் 4 பேர் வங்கதேசம் சென்று நம் நாட்டு எல்லை அருகே ரகசிய விசிட் செய்துள்ளனர்.
இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத ஓய்வு பெற்ற வங்கதேசத்தின் ராணுவ ஜெனரல் ஒருவர் கூறுகையில், ‛‛வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நீண்டகால பிரச்சனை உள்ளது. ஆனால் இப்போது உடனடியாக வங்கதேச ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வங்கதேசத்துக்கும் விசிட் செய்கின்றனர். சீக்கிரமாக இருநாடுகளும் ஒன்றாக சேர்ந்து கொள்ள தயாராகி விட்டன. இருநாடுகளும் ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைக்க விரும்புவதை தான் இது காட்டுகிறது. இதனை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இதனால் இந்த செயல்களுக்கு இந்தியாவின் பதில் என்னெவன்று இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை'' என கூறியுள்ளார். .
தற்போது வங்கதேசம் வந்த பாகிஸ்தான் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் எதற்காக வந்தனர்? எந்த மாதிரியான ஆய்வுகள் மேற்கொண்டனர்? என்ற விபரம் இப்போது வரை வெளிவரவில்லை. இதனை வங்கதேசம் ரகசியம் காத்து வருகிறது. ஏற்கனவே கோழிக்கழுத்து பகுதியில் வங்கதேசம் துருக்கி நாட்டின் நவீன ட்ரோன்கள் வைத்து உளவு பார்த்து வருகிறது. இதன் அடுத்தப்படியாக பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் கோழிக்கழுத்து எல்லை அருகே ரகசிய விசிட் செய்துள்ளனர். இதுதான் நமக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வங்கதேசத்தின் இந்த செயல் என்பது நம் நாட்டுக்கு தலைவலியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications