சுதந்திர போராட்ட வீரர்களாம்.. காஷ்மீர் தீவிரவாதிகளை புகழ்ந்த பாக்., துணை பிரதமர் - திமிர் பேச்சு
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தான் நடத்தினர். இது நம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருநாடுகள் இடையே போர் மூளும் நிலை உருவாகி உள்ளது. இப்படியான சூழலில் தான் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுதந்திர போராட்ட வீரர் என்று வாய்க்கொழுப்புடன் பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் புல்மேட்டில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் நடந்த பெரிய அட்டாக்காக இது உள்ளது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இப்போது 26 சுற்றுலா பயணிகள் இறந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும். இதனால் இந்த தாக்குதலில் நேரடியாக பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது. இதனை பாகிஸ்தான் ஏற்க மறுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இசாக் தார் புகழ்ந்து திமிராக பேசி உள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக இருக்கலாம்'' என்று திமிராக பேசி உள்ளார். அதுமட்டுமின்றி, ‛‛பாகிஸ்தான் மீது இந்தியா நேரடியாக தாக்குதல் நடத்தினால் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கமாட்டோம். பழிக்கு பழி என்ற அடிப்படையில் திருப்பி தாக்குவோம்'' என வாய்ச்சவடால் விடுத்துள்ளார்.
இசாக் தாரின் இந்த பேச்சு என்பது பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தொடங்கிய பிறகு தான் வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, 48 மணிநேரத்தில் பாகிஸ்தானியர்கள் வெளியேற இந்தியா போட்ட உத்தரவு, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள 56 பேரின் எண்ணிக்கையை 30 ஆக குறைப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இதையடுத்து தான் இசாக் தார் வாய்க்கொழுப்புடன் பேசி உள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசீப் கூறுகையில், ‛‛இந்தியா எங்களை தாக்கினாலும் நாங்களும் பதிலுக்கு தாக்குவோம். எங்களின் மக்கள் இந்தியாவால் பாதிக்கப்பட்டால் இந்திய மக்களும் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள்'' என்று பூச்சாண்டி காட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications
