பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட்: நவாஸ் ஷரீப் vs இம்ரான்கான்.. யாருக்கு வெற்றி.. எகிறும் எதிர்பார்ப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளன. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் கட்சிக்கும், இம்ரான் கான் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முந்தைய நாள் பலுசிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் சுமார் 25 பேர் பலியான நிலையில், தேர்தல் அமைதியாக நடக்குமா என்று கேள்வி எழுந்தது. எனவே தேர்தலுக்காக நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி நேற்று தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்நாட்டின் சட்ட திட்டத்தை பொறுத்த அளவில், தேர்தல் நடைபெற்று 14 நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கையின் முடிவு அறிவிக்கப்பட வேண்டும். எனவே வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி, ராவல்பிண்டியின் என்ஏ-55 மற்றும் என்ஏ-58 ஆகிய இரண்டு தொகுதிகளை நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. அதேபோல முன்னாள் பிரதமரான ஷெபாஷ் ஷெரிப் லாகூரின் என்ஏ-123 தொகுதியில் 63,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications