
அடுத்த இலங்கையாகிறதா பாகிஸ்தான்? மூன்று மாதங்களுக்கு இறக்குமதிக்கு தடை! புலம்பும் அமைச்சர்
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் நிதி நிலைமை மோசமாகி வருவதாகவும், மிக மோசமான நாட்கள் விரைவில் வரவிருக்கின்றன என்றும் கூறும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் அடுத்த 3 மாதங்களுக்கு நாட்டில் இறக்குமதி செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது.
வரலாறு காணாத கடன் சுமை ஒரு பக்கம் என்றால் பொருளாதார வீழ்ச்சி ஒரு பக்கம் என இருபக்கமும் நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
டிவி விவாத நேரலையில் “காரி துப்பிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ” பரவும் வீடியோ. .நெட்டிசன்கள் கேலி

கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியல்
குறிப்பாக பாகிஸ்தானில், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்பிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது.

இன்னும் மோசமாக இருக்கும்
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரியுள்ளது. அமெரிக்காவிடம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளது. எனினும், இதுவரை சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதியை விடுவிக்கவில்லை. இதனால், கடும் நெருக்கடியை பாகிஸ்தான் எதிர்கொண்டு வரும் நிலையில், வரும் நாட்கள் இன்னும் மோசமாக இருக்கும் என்று பாகிஸ்தானின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நிதி நிலைமை மோசமாகிவிட்டது
பாகிஸ்தான் பங்குச்சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் மேலும் கூறியதாவது: ''பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் திறமையற்ற நிர்வாகத்தால் நாட்டில் நிதி நிலைமை மோசமாகிவிட்டது. பாகிஸ்தானின் நவாஸ் ஷெரீப் ஆட்சி காலத்தில் 1,600 பில்லியன் டாலராக இருந்த நிதிப் பற்றாக்குறை இம்ரான் கான் ஆட்சி காலத்தில் 3,500 டாலர் பில்லியனாக உயர்ந்து விட்டது. நடப்பு கணக்கு பற்றாக்குறையுடன் உள்ள எந்த ஒரு நாட்டாலும் வளர்ச்சி அடைய முடியாது. பட்ஜெட் பற்றாக்குறையை உயர்த்தும் போதும் கடனை 80 சதவீதம் அளவுக்கு உயர்த்தினாலும் பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்.

3 மாதங்களுக்கு இறக்குமதி கிடையாது
எனவே, இறக்குமதியை அதிகரிக்க அடுத்த மூன்று மாதங்களுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். இதற்கு மத்தியில் ஒரு கொள்கையும் கொண்டு வரப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தம் அடையும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்கு வேற வாய்ப்பு இல்லை. நாம் சரியான பாதையிலேயே செல்கிறோம். அடுத்த மூன்று மாதங்களுக்கு இறக்குமதியை கட்டுப்படுத்தினால், பல்வேறு வழிகளில் நமது ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்" என்றார்.

அடிமைப்பட்டு கிடப்பதாக
முன்னதாக நேற்று, சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அடிமைப்பட்டு கிடப்பதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னமும் நாம் பொருளாதார ரீதியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல சவாலான முடிவுகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்" என பேசியிருந்தார்.