"இந்தியா தாக்கினால் கடும் பதிலடி தருவோம்.." பயத்தில் சொன்னதையே திரும்ப திரும்ப உளறும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் மீது பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், தங்களுக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என மீண்டும் மறுத்தார். மேலும், இந்தியா தாக்குதல் நடத்தினால் அதற்குக் கடுமையான பதிலடி தரவும் ரெடியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவி பொதுமக்களைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அச்சத்தில் பாகிஸ்தான்
இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த உயர்மட்டக் கூட்டத்திலும் கூட பஹல்காம் தாக்குதலுக்கு எப்படி எங்கே பதிலடி தரலாம் என்ற முடிவை எடுக்க ராணுவத்திற்கு முழுச் சுதந்திரத்தைப் பிரதமர் மோடி அளித்தார். இதனால் இந்தியா ஏதோ பெரிதாகத் திட்டமிட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மீண்டும் தேவையே இல்லாமல் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறியுள்ளார். பாகிஸ்தான் எப்போதும் மோதலைத் தொடங்காது என்றாலும், இந்தியாவால் மோதலைத் தொடங்கினால் மிகவும் கடுமையான பதிலடி கொடுக்கும் என அவர் கூறியிருக்கிறார். இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் உள்ள பாகிஸ்தானின் டாப் தலைவர்கள், ஒரே நாளில் 3வது முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.
இஷாக் தார்
இஸ்லாமாபாத்தில் ஐஎஸ்பிஆர் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் வெளியுறவு அலுவலகச் செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கானுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இஷாக் டார் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியா எப்போது எப்படி பதிலடி கொடுக்குமோ என்ற அச்சத்தில் உள்ள பாகிஸ்தான் தலைவர்கள் பயத்தில் தினசரி எதாவது ஒன்றைக் கூறி வருகிறார்கள். அப்படித் தான் இஷாக் தார் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
பதிலடி தருவார்களாம்
இந்தியா தனது சொந்த லாபத்திற்காகச் செய்து வரும் ஆத்திரமூட்டும் செயல்களால் தெற்காசியப் பகுதி முழுவதும் ஆபத்தில் இருப்பதாக இஷாக் தார் கூறியிருக்கிறார்.. அவர் மேலும் பேசுகையில், "இந்த விவகாரத்தில் சர்வதேச தலைவர்கள் அனைவரும் பொறுமை தேவை எனக் கூறி வருகிறார்கள். நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பாகிஸ்தான் எப்போதும் முதலில் தாக்குதலை நடத்தாது. அதேநேரம் இந்தியாவிலிருந்து வரும் எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் வலுவான பதில் அளிக்கப்படும். பாகிஸ்தான் ராணுவம் இப்போது ஹை அலர்ட் மோடில் இருக்கிறது" என அவர் கூறினார்.
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்த இஷாக் தார், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். மேலும், பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க முடியாது என்றும் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.. மேலும் அவர் பேசுகையில், "அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளனர். எந்தவொரு காரணம் அல்லது நோக்கமும் இந்தச் செயலை நியாயப்படுத்தாது" என்று கூறிய அவர் மனித உயிரின் புனிதத்தன்மை குறித்தும் சில மேற்கோள்களைக் காட்டினார்.
காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் பிராந்தியச் சிக்கல் தீர்க்கப்படாததே இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் என்றும் அவர் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை இந்தியா மீறுவது, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களே இந்த மோதலுக்குப் பிரதானக் காரணம் என்றும் இஷாக் தார் தெரிவித்தார்.
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான சட்டங்களால் தான் தீவிரவாத சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "காஷ்மீரில் இந்தியா விதிக்கும் கட்டுப்பாடுகள் அங்குள்ள இளைஞர்களைப் பாதிக்கிறது. இதுவே அவர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்லக் காரணமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications