தமிழ்நாட்டை தொடர்ந்து லட்சத் தீவுகள் செல்லும் மோடி- ரூ1,150 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
கரவெட்டி: தமிழ்நாட்டுக்கு ஜனவரி 2-ந் தேதி வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். நண்பகல் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். விமானப் போக்குவரத்து, ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.15 மணியளவில் லட்சத்தீவின் அகத்தி செல்லும் பிரதமர் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். ஜனவரி 4, 2024 அன்று நண்பகல் 12 மணியளவில், லட்சத்தீவின் கவரட்டிக்குச் செல்லும் பிரதமர், அங்கு லட்சத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைத்தொடர்பு, குடிநீர், சூரிய சக்தி, சுகாதாரம் போன்ற துறைகள் தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். லட்சத்தீவுகளுக்குச் செல்லும் பிரதமர், ரூ.1150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கடலுக்கடியில் கண்ணாடி இழை கேபிள்: ஒரு மாற்றம் நிறைந்த சிறந்த நடவடிக்கையாக, கொச்சி-லட்சத்தீவுகள் இடையே கடலுக்கடியில் கண்ணாடி இழை கேபிள் இணைப்பு (கே.எல்.ஐ - எஸ்.ஓ.எஃப்.சி) திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் லட்சத்தீவில் மெதுவான இணையப் பிரச்சனை சரி செய்யப்படும். ஆகஸ்ட் 2020- ல் செங்கோட்டையில் சுதந்திர தின உரையின்போது இது குறித்த அறிவிப்பைப் பிரதமர் வெளியிட்டார். இந்தத் திட்டம் தற்போது நிறைவடைந்து அதைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது இணைய வேகத்தை 100 மடங்குக்கு மேல் அதிகரிக்க வழிவகுக்கும் (1.7 ஜி.பி.பி.எஸ் முதல் 200 ஜி.பி.பி.எஸ் வரை). சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக, கடலுக்கடியில் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படுகிறது. லட்சத்தீவுகளில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை இந்த திட்டம் உறுதி செய்யும், விரைவான மற்றும் நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் ஆளுமை, கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி சேவை, டிஜிட்டல் பணப் பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றுக்கு இது பெரிய பயன் அளிக்கும்.
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கட்மாட் பகுதியில் குறைந்த வெப்பநிலை கடல்நீரை குடிநீராக்கும் (எல்.டி.டி.டி) ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதன் மூலம் தினமும் 1.5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் உற்பத்தி செய்யப்படும். அகத்தி மற்றும் மினிக்காய் தீவுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர்க் குழாய் இணைப்புகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். லட்சத்தீவு, பவளத் தீவு என்பதால், நிலத்தடிநீர் கிடைப்பது எப்போதுமே சவாலாக இருந்தது. இந்தத் திட்டங்கள் அதனை சரி செய்து, லட்சத் தீவுகளின் சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.
முதல் சூரிய மின் உற்பத்தி நிலையம்: பேட்டரி அடிப்படையில் இயங்கும் சூரிய மின்சக்தி திட்டமான லட்சத்தீவின் கவரட்டியில் உள்ள முதல் சூரிய மின் உற்பத்தி நிலையமும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் அடங்கும். இது டீசல் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும். கவரட்டியில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.என்) வளாகத்தில் புதிய நிர்வாக அலுவலகம் மற்றும் 80 ஆண்கள் பாசறையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அங்கன்வாடி மையங்கள்: கல்பேனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைப்பதற்கும், ஆண்ட்ரோத், சேத்லட், கட்மத், அகத்தி, மினிக்காய் ஆகிய ஐந்து தீவுகளில் ஐந்து மாதிரி அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications