ஒரே ஒரு கேள்வியை வைத்து.. தாய்-சேய் இருவரையும் மரணத்திலிருந்து காப்பாற்றிய சாட்ஜிபிடி! அது எப்படி?
சார்லோட்: இந்தக் காலத்தில் எல்லாமே ஏஐ வசம் மாறி வருகிறது. AI ஏகப்பட்ட நன்மைகளை ஏற்படுத்துவதே இதற்குப் பிரதானக் காரணமாகும். இதற்கிடையே 8 மாதக் கர்ப்பிணிப் பெண் சாட்ஜிபிடியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியை வைத்தே அவரது உடல்நிலையைப் புரிந்து கொண்ட சாட்ஜிபிடி சரியான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்தப் பெண் மட்டுமின்றி, அவர் வயிற்றில் இருந்து குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்தக் காலத்தில் ஏஐ துறை தான் படுவேகமாக வளர்ந்து வருகிறது. சாட்ஜிபிடிக்கு பிறகு ஏஐ துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. பல்வேறு வழிகளிலும் ஏஐ நமக்கு உதவும் நிலையில், இதன் மூலம் பலரது உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகிறது. இதுவே ஏஐ வளர்ச்சிக்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது.

சாட்ஜபிடி
அப்படித் தான் இங்கே சாட்ஜபிடி ஒரு பெண்ணையும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் காப்பாற்றி இருக்கிறது. இது ஏதோ நம்ப முடியாத ஒன்று போலத் தோன்றலாம். ஆனால், சாட்ஜிபிடி உடனான சாதாரண உரையாடல் எப்படித் தன்னையும் தனது பிறக்காத குழந்தையையும் காப்பாற்றியிருக்கிறது என்ற தகவலை அந்தப் பெண் பகிர்ந்துள்ளார்.
நட்டாலியா டாரியன் என்ற பெண் தான் இது தொடர்பாகத் தனக்கு நேர்ந்ததை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். 8 மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் சாட்ஜிபிடியிடம் சும்மா ஒரு சந்தேகம் கேட்டுள்ளார். ஆனால், அதுவே அவரது உடல் எந்தளவுக்கு ஆபத்தில் இருந்தது என்பதைக் கண்டறிந்து எமர்ஜென்சியாக குழந்தை பிறக்கக் காரணமாக இருந்துள்ளது. இதன் மூலம் தாய்- சேய் என இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
சும்மா ஒரு கேள்வி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நான் சாட்ஜிபிடியிடம் சும்மா ஒரு கேள்வி கேட்டேன்.. இன்று ஏன் எனது தாடை இறுக்கமாக இருக்கிறது? எனக் கேட்டேன். உண்மையில் எனக்கு அது பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. இருந்தாலும் கேட்கலாம் எனக் கேட்டேன். அதற்கு சாட்ஜிபிடி, "உனது ரத்த அழுத்தத்தைச் சரிபார்க்கவும்" எனப் பதிலளித்தது. நான் செக் செய்தேன். எனது ரத்த அழுத்தம் அது அதிகமாக இருந்தது.. மிகவும் அதிகமாக இருந்தது. அது கொஞ்சே நேரத்தில் குறையும் என்று நினைத்தேன்.. ஆனால் அது ஏறிக்கொண்டே இருந்தது.
குழந்தை பிறந்தது
அதையும் சாட்ஜிபிடியிடம் குறிப்பிட்டேன்.. அது உடனடியாக ஆம்புலன்ஸுக்கு கால் செய்யச் சொன்னது. இதையடுத்து நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, எனது ரத்த அழுத்தம் 200/146ஆக இருந்தது. நான் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்தேன். என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள், "உடனடியாகக் குழந்தையை டெலிவரி செய்ய வேண்டும்" என்றனர். என் மகன் நல்ல முறையில் பிறந்தான். இப்போது நான் நலமாக இருக்கிறேன்.
உயிரே போய் இருக்கும்
ஆனால் அப்போது மருத்துவர் என்னிடம் சொன்னார். அன்றிரவு நீங்கள் தூங்கியிருந்தால்.. நீங்கள் எழுந்திருக்காமல் போய் இருக்கலாம் என்றார். அப்போது தான் எனது உடல்நிலை எந்தளவுக்கு சீரியஸாக இருந்தது என்பது புரிந்தது. பிரசவத்திற்குப் பிறகும் கூட ஐந்து நாட்களுக்கு, என் ரத்த அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சில காலம் நான் எனது பார்வையைக் கூட இழந்தேன். அதைப் பற்றி யோசிக்கும்போது இப்போதும் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது..
இவை அனைத்துமே ஒரு சின்ன அறிகுறி மற்றும் ஒரு கேள்வியால் தான் தெரிய வந்தது. நான் சாட்ஜிபிடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது ஒரே நேரத்தில் இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications