இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை டிரம்ப் விரைந்து தணிக்க விரும்புகிறாராம்.. வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் காட்டுகிறார் என்றும், இரு நாடுகளின் தலைவர்களுடனும் அதிபர் டிரம்ப்புக்கு நல்ல உறவு உள்ளது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லிவிட் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது. வியாழக்கிழமை இரவு ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்து வருகின்றன.
தொடர் தாக்குதல், பதிலடி தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தானை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இன்று இரவும் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய விரோதப் போக்குகள் அதிகரித்து வருவதால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "முடிந்தவரை விரைவில் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறார்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். அவர் இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார்" என்று லீவிட் கூறினார்.
வியாழக்கிழமை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எந்தவொரு நேரடி அமெரிக்க தலையீட்டையும் ஏற்க மறுத்தார். தற்போதைய மோதல் எங்கள் பிரச்சனை அல்ல என்று கூறினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா ராஜதந்திரம் மூலம் பதற்றத்தைக் குறைக்க ஊக்குவிக்கும் அதே வேளையில், அது ராணுவ ரீதியாக தலையிடாது என்று வான்ஸ் கூறினார்.
ஜேடி வான்ஸ், "இந்தியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல அமெரிக்காவால் முடியாது. பாகிஸ்தானியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, இந்த விஷயத்தை ராஜதந்திர வழிகள் மூலம் நாங்கள் தொடர்ந்து தொடரப் போகிறோம்" என்று அவர் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications