அதிகரிக்கும் ரஷ்யா-உக்ரைன் பதற்றம்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் திடீர் சந்திப்பு
பெய்ஜிங்: குளிர்கால ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சிக்காக பெய்ஜிங் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. கடந்த 2008இல் பெய்ஜிங்கில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போலவே இதையும் பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளது.
அதேபோல சர்வதேச அரசியல் ரீதியாகவும் இது முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் இதன் நிகழ்வின் தொடக்கவிழாவில் ரஷ்ய அதிபர் புதின் உட்பட 30க்கும் மேற்பட்ட உலக நாட்டுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முக்கிய சந்திப்பு
இதற்காக பெய்ஜிங் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தைக் குவித்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் இதனால் பல்வேறு மேற்கு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தச் சூழலில் சீனாவுக்கு அதிக எரிவாயுவை வழங்கும் புதிய ஒப்பந்தத்தைத் தயார் செய்துள்ளதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பன் ஏற்றுமதி
சர்வதேச அளவில் ரஷ்யாவில் இருந்து தான் அதிகளவில் ஹைட்ரோகார்பன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவுக்கும் ஹைட்ரோகார்பன் தேவை அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து இணக்கமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு ஹைட்ரோகார்பன் விநியோகம் செய்யும் வழிமுறைகளில் சிறந்த தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் புதின் தெரிவித்தார்.

ரஷ்யா
ரஷ்யாவில் இருந்து சீனாவிற்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10 பில்லியன் கன மீட்டர் ஹைட்ரோகார்பனை வழங்குவது தொடர்பான புதிய ஒப்பந்தம் தயாராக உள்ளதாகவும் புதின் குறிப்பிட்டார். ரஷ்யா அதன் சைபீரியா பைப்லைன் வழியாகவும் கன்டெய்னர்கள் மூலமும் சீனாவுக்கு ஹைட்ரோகார்பனை அனுப்பி வருகிறது. கடந்த 2019 முதல் ரஷ்யா இந்த விநியோகத்தைத் தொடங்கியது. கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் சுமார் 16.5 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) எரிவாயுவைச் சீனாவுக்கு ரஷ்யா அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகள்
இது வரும் 2025 ஆம் ஆண்டில் 38 பிசிஎம் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிவாயுவை அனுப்பும் நெட்வொர்கை பவர் ஆஃப் சைபீரியா கொண்டுள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளுக்கு போதிய அளவில் எரிவாயு அனுப்பாததால் அங்கு எரிவாயு விலை பல மடங்கு உயர்ந்துள்ளன. ஐரோப்பாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படப் பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்












Click it and Unblock the Notifications