“1993ல் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது ஜெர்மனியில்..!” தீயாக பரவும் மோடியின் பழைய புகைப்படம்
பெர்லின் (ஜெர்மனி) : பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தப் புகைப்படம் நரேந்திர மோடி 1993ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் சிக்கல்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைத் தவிர்த்து வந்தார் பிரதமர் மோடி. கொரோனா பரவல் சற்று குறைந்ததும், கடந்த ஆண்டு மார்ச் மாதம், நம் அண்டை நாடான வங்கதேசம் சென்றார்.
அதன் பின், கடந்த செப்டம்பரில் ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார். கடந்த அக்டோபரில் பிரிட்டன், இத்தாலி நாடுகளுக்கு சென்றார். அதற்குப் பின், தற்போதுதான் மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஜெர்மனி சென்ற பிரதமர்
3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார். பெர்லினில் இந்திய பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஹோட்டல் அட்லான் கெம்பின்ஸ்கியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெர்மனி - இந்தியா இடையேயான ஆறாவது கூட்டுக் கூட்டத்தில் ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஷோல்ஸுடன் இணைந்து பங்கேற்றார் பிரதமர் மோடி.

டென்மார்க்கில் மோடி
டென்மார்க்கில் நடக்கும் இரண்டாவது, இந்தியா - நார்டிக் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றனர்.
மீண்டும் இந்தியா திரும்பும் வழியில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, இரு நாட்டு உறவு குறித்தும் பேச இருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.
Recommended Video

புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய பயணத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வரும் அதேநேரத்தில், ஜெர்மனியில் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
அந்தப் புகைப்படத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது நண்பர் ஒருவர் ரோமானியப் பேரரசை நிறுவிய சார்லமேனின் சிலைக்கு முன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடி 1993ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட படம் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது பிரதமர் ஜெர்மனி சென்ற நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications